ஹஜ்ஜுப் பெருநாள் குர்பான் சடங்குக்கான பதிவுகள் தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு முஸ்லிம் சமூகத்தினரின் கடமையை மேலும் அர்த்தமுள்ளதாக்கக் காஸாவுக்கும் உதவிக்கரம் நீட்டும் ஈகையும், குர்பான் சடங்குடன் தொடர்ந்து நடைபெற உள்ளது.
வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் ஆட்டிறைச்சியைக் கொண்டு நடத்தப்படும் குர்பான் சடங்கை சிங்கப்பூரில் உள்ள 55 பள்ளிவாசல்கள் ஏற்று நடத்தும் என்று சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்தது.
குர்பான் சடங்கின்போது வெள்ளாடு, செம்மறியாடு போன்ற பண்ணை கால்நடைகள் இறைபலி கொடுக்கப்பட்டு, பின்னர் அவற்றின் இறைச்சி வழிபாட்டாளர்களுக்கும், வசதி குறைந்தவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
முதலில் வருவோர்க்கு முதற்சலுகை என்ற அடிப்படையில் கால்நடைகளின் இறைச்சியும் சேவைக்கான இடங்களும் வழங்கப்படும் என்றும் பதிவுக்கான இறுதி நாள் மே 22ஆம் தேதி என்றும் அறிக்கை கூறியது.
கடந்த ஆண்டைப்போலவே, ‘சலாம்எஸ்ஜி’’ வெளிநாட்டு குர்பான் திட்டத்தின் மூலம் காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்குத் தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டவுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக, குர்பான் சடங்கு வழியாகப் பெறப்படும் இறைச்சி காஸாவிற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முஸ்லிம் பள்ளிவாசலான ஜாமிஃஆ சூலியா இந்த ஆண்டு குர்பான் சடங்குக்கான முன்பதிவு வழங்கும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் முரசிடம் பேசினார் நிர்வாகக் குழுத் தலைவர் ரஷீத் ஜமான்.
தொடர்புடைய செய்திகள்
‘‘ஜாமிஃஆ சூலியா பள்ளிவாசலில் மீண்டும் குர்பான் சடங்கை நேரடியாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு, நமது இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
“இந்த வாய்ப்பை நமது சமூகத்தினர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறோம்,’’ என்றார் அவர். விரிவுபடுத்தப்பட்ட இடங்களில் அல்-இஸ்திஃபார் (Al-Istighfar) பள்ளிவாசலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே இத்தொடக்கம் குறித்து பேசிய “குர்பான் என்பது நம்பிக்கை, தியாகம் மற்றும் கருணையைப் பிரதிபலிக்கிறது.
‘‘இது மலாய், முஸ்லிம் சமூகத்தினருக்குப் பேரளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகம் இதற்கான ஆதரவை தரவேண்டும்,” என்று குறிப்பிட்டார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம்.

