இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை வியாழக்கிழமை (டிசம்பர் 18) பெற்றுக்கொண்டனர்.
இந்த ஆண்டு வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவில் (NA) உயர்நிலை 4 மாணவர்கள் மொத்தம் 8,987 பேரும் வழக்கநிலைத் தொழில்நுட்பப் பிரிவில் (NT) 4,479 பேரும் தேர்வெழுதினர்.
வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவில் 8,934 பேர் (99.4 விழுக்காடு) குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் தரத்தேர்ச்சி 5 அல்லது அதற்கும் மேலான தரத்தேர்ச்சி பெற்று, ‘ஜிசிஇ என்ஏ’ நிலைச் சான்றிதழைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
வழக்கநிலைத் தொழில்நுட்பப் பிரிவில் 4,375 பேர் (97.7 விழுக்காடு) குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் தரத்தேர்ச்சி ‘டி’ அல்லது அதற்கு மேலான தரத்தேர்ச்சி பெற்று, ‘ஜிசிஇ என்டி’ நிலைச் சான்றிதழைப் பெற்றுள்ளனர்.
வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவில் 56.3 விழுக்காட்டினர், வழக்கநிலைத் தேர்வுகளுடன் ‘ஓ’ நிலை பாடத் தேர்வுகளையும் எழுதினர்.
உயர்நிலை 5 வழக்கநிலை ஏட்டுக்கல்விக்கான வளர்ச்சிநிலைப் பாதை
மாணவர்களின் ‘என்ஏ’ நிலை முடிவுகள் மற்றும் பள்ளியில் நடத்தப்பட்ட ‘ஓ’ நிலை முன்னோட்டத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 76.4 விழுக்காட்டு மாணவர்கள் உயர்நிலை 5க்கு முன்னேறத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் மூன்று சிறந்த பாடங்களில் (ELMAB3) தேவையான ஒட்டுமொத்தப் புள்ளிகளையும் பாடத்திற்கான தகுதியையும் பெற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவு மாணவர்களுக்கான வளர்ச்சிநிலைப் பாதைகள்
உயர்நிலை 5 பாதைக்கு அப்பாற்பட்டு, ‘என்ஏ’ நிலை மாணவர்களுக்குப் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளும் உள்ளன.
பலதுறைத் தொழிற்கல்லூரி நேரடிச் சேர்க்கைத் திட்டத்திற்கு (Direct-Entry-Scheme) வியாழக்கிழமை (டிசம்பர் 18) முதல் விண்ணப்பிக்கலாம். இதன்வழி தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஈராண்டு ‘ஹையர் நைடெக்’ (Higher Nitec) படிப்பில் நேரடியாகச் சேரலாம்.
கல்வி ஆண்டு 2026ல் இந்தத் திட்டத்திற்கு ஏறக்குறைய 1,200 இடங்கள் உள்ளன.
சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ள மாணவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஓராண்டு அடிப்படைத் திட்டத்திற்கு (Polytechnic Foundation Programme) விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏறத்தாழ 2,000 இடங்களுக்கு 2026 ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவு மாணவர்கள், முதலில் அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி உயர்நிலை 5 வழக்கநிலை ஏட்டுக்கல்விக்குத் முன்னேற வேண்டும். விண்ணப்ப முடிவுகள் வெளியாகும் வரை, இம்மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் உயர்நிலை 5 பாடங்களை ஜனவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து பயில வேண்டும்.
வழக்கநிலைத் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கான வளர்ச்சிநிலைப் பாதைகள்
தங்கள் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த வழக்கநிலைத் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மூன்று ஆண்டுகள் கொண்ட ‘ஹையர் நைடெக்’ அல்லது மேம்படுத்தப்பட்ட அடிப்படைப் பாடத்துடன் (Enhanced Foundation Programme) நான்கு ஆண்டுகள் கொண்ட ‘ஹையர் நைடெக்’ படிப்புகளிலும் சேரலாம்.
அத்துடன், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் ‘ஏ’ தரத்தேர்ச்சியும், மேலும் ஒரு பாடத்தில் குறைந்தது ‘பி’ தரத்தேர்ச்சியும் பெற்ற மாணவர்கள், பள்ளிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவிற்கு மாற்றப்படலாம்.
கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டல் ஆதரவு
மாணவர்கள் தங்கள் அடுத்த கட்டக் கல்வித் திட்டங்கள் குறித்துத் தெளிவான முடிவுகளை எடுக்க, அந்தந்தப் பள்ளிகள், இணையத்தளங்கள் அல்லது கல்வி அமைச்சின் கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டல் (ECG) நிலையத்தின் ஆலோசனையைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஆர்வமுள்ளோர் go.gov.sg/moe-ecg-centre என்ற இணையத்தளத்தில் கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டல் ஆலோசகருடன் சந்திப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

