சென்ற ஆண்டுக்கான பொதுக் கல்விச் சான்றிதழ் (ஜிசிஇ) சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் இம்மாதம் 10ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் உயர்நிலைப் பள்ளிகளில் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு, திங்கட்கிழமையன்று (ஜனவரி 3) செய்தி அறிக்கை மூலம் தெரிவித்தது.
தேர்வு முடிவுகளைப் பெறுவதன் தொடர்பிலான தகவல்களை பள்ளிகள், தங்கள் மாணவர்களிடம் தெரியப்படுத்தும். நேரில் சென்று தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள இயலாத மாணவர்கள் தங்களின் சார்பில் வேறொருவரை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவேண்டும்.
தங்களின் சார்பில் வேறொருவரையும் அனுப்ப முடியாத மாணவர்கள் பள்ளியிடம் உதவி கேட்கவேண்டும்.
சிங்பாஸ் கணக்கு வைத்திருக்கும் தனியார் மாணவர்கள், அந்த விவரங்களைக் கொண்டு ஜனவரி 10 பிற்பகல் 3.15 மணியிலிருந்து இம்மாதம் 24ஆம் தேதி இரவு 11 மணி வரை சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகத்தின் இணையத் தளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். சிங்பாஸ் கணக்கு இல்லாதோர், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகத் தளத்தில் உருவாக்கிய கணக்கைப் பயன்படுத்தி முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
பள்ளி, தனியார் மாணவர்கள் இரு தரப்பினரும் தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரியில் ஜனவரி 10 பிற்பகல் மூன்று மணியிலிருந்து ‘ஏ’ படிவத்தின் (Form A) மின்னிலக்க வடிவத்தைப் பெறுவர். அந்தப் படிவத்தில் மாணவர்களின் ஜிசிஇ சாதாரண நிலைத் தேர்வு முடிவுகளும் அவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பாடங்களும் இடம்பெற்றிருக்கும்.
ஜனவரி 10 பிற்பகல் 4 மணியிலிருந்து ஜனவரி 15 பிற்பகல் 4 மணி வரை மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகளை ‘ஜேஏஇ-ஐஎஸ்’ (JAE-IS) இணையத்தளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம்.