தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த எங்களுக்கு வாக்களியுங்கள்: பால் தம்பையா

2 mins read
68e6fe64-2ffb-4b9c-9b7b-127946e8fc64
வரும் சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரக் கூட்டத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை (மே 1) காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக) தலைவர் பேராசிரியர் பால் தம்பையா. - படம்: இளவரசி ஸ்டீஃபன்
multi-img1 of 2

தேர்தலில் தேசிய அளவிலான அக்கறைக்குரிய விவகாரங்களை முன்வைத்து இதுவரை வாக்கு சேகரித்த சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக), பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களைக் கண்முன் காண சிங்கப்பூரர்கள் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளது.

வரும் சனிக்கிழமை (மே 3) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரக் கூட்டத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை (மே 1) காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் பால் ஆனந்தராஜா தம்பையா.

இந்த பொதுத் தேர்தலில் சிஜக 11 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. திரு தம்பையா புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து, வியாழக்கிழமை காலை புக்கிட் பாஞ்சாங் உணவங்காடிக்குச் சென்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திரு தம்பையா.

“புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை மறுஅணுகுமுறை மற்றும் விரிவாக்கம், பொது இடங்களில் குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளுடன் கடந்து செல்லும் பெற்றோர் மற்றும் மூத்தோருக்கு உதவ சீரான மின்தூக்கி வசதிகள், வட்டாரத்தில் துப்புரவு சார்ந்த தூய்மைப் பணியை மேலும் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நடைமுறைப்படுத்த சிஜகவிற்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, தேசிய அளவில் மக்களைப் பாதிக்கும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளிலும் தம் கட்சி கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் அவர் சொன்னார்.

“பணம் இருந்தால் நல்ல மனநலச் சேவை கிட்டும். ஒருவேளை நிலைமை அப்படி இல்லை என்றால், மனநலச் சேவையைப் பெறுவதற்கான வரிசையில் காத்திருக்க நேரிடும். பொதுச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில் மாந்தர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளவும் நேரிடக்கூடும்,” என்றார் திரு தம்பையா.

அவ்வகையில், சிஜக முன்மொழிந்துள்ள தேசிய சுகாதார காப்புறுதித் திட்டம் தனியார் மற்றும் பொதுச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கானதாகத் திகழ்ந்து, மக்கள் அச்சேவையை எளிதாக அணுக இருக்கும் தடையை நீக்கும் என்று அவர் கூறினார்.

‘‘அதன் வாயிலாகச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கான காத்திருப்பு குறைந்து, அதனை மக்கள் இலகுவாக அணுகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வாக்கு சேகரிக்க வந்த திரு தம்பையாவிற்கு உணவங்காடியில் இருந்த பலர் உழைப்பாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

அரசியல் தலைவராகத் திகழ பெற்றோர் அளித்த ஊக்கம் குறித்து நினைவுகூர்ந்த திரு தம்பையா, “என் தந்தை ஒரு நீரிழிவு சிகிச்சை நிபுணர்; குடும்பத்தை ஆதரிக்க பொதுத்துறையிலிருந்து தனியார்த் துறைக்கு மாறினார். என் தாயார் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிப்பவர், அவர்களுக்காகக் குரல்கொடுத்து வருபவர்.

‘‘அவ்வகையில், சமூகத்திற்கு இயன்றவரை பங்களிப்பு நல்குவது சார்ந்த நெறிமுறைகள் எனக்கும் என் சகோதரிக்கும் சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட்ட பண்பு,’’ என்று சொன்னார்.

குறிப்புச் சொற்கள்