இவ்வாண்டு பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றோரில் மொத்தம் 92.83 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.
அந்த விகிதம், 2,438,610 வாக்காளர்களுக்குச் சமம். இந்த எண்ணிக்கை வெளிநாடுவாழ் வாக்காளர்களையும் உள்ளடக்கும்.
2025 பொதுத் தேர்தலில் போட்டி இருந்த தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 2,627,026 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.
9,000க்கும் அதிகமான வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் வாக்களித்தனர். அவர்களின் வாக்குகள் வியாழக்கிழமை (மே 15) எண்ணப்பட்டன.
வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் அளித்த வாக்குகளின் முடிவுகளுக்கும் உள்ளூர் வாக்களிப்பு முடிவுகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.
போட்டி இருந்த எல்லா தொகுதிகளிலும் மொத்தம் 17,237 வெளிநாடுவாழ் வாக்காளர்கள் இருந்ததாகத் தேர்தல் துறை வியாழக்கிழமை (மே 15) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது. அவர்களில் வெளிநாட்டு வாக்களிப்பு நிலையங்களில் நேரடியாக வாக்களிக்க 8,091 பேர் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் 5,966 பேர் 10 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தனர்.
அவற்றோடு, அஞ்சல்வழி வாக்களிக்கப் பதிவுசெய்த 6,097 வாக்காளர்களில் 3,363 பேர் வாக்குகள் காலக்கெடுவிற்குள் வந்துசேர்ந்தன. ஒட்டுமொத்த செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை 42,945.
வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே இம்மாதம் மூன்றாம் தேதி நடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. போட்டி இருந்த 32 தொகுதிகளிலும் இருந்த வாக்கு வித்தியாச விகிதம், அந்தந்தத் தொகுதியின் மொத்த வெளிநாடுவாழ் வாக்காளர் எண்ணிக்கையைவிட அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டி இல்லாததால் அங்கு மக்கள் செயல் கட்சி (மசெக) வாக்கெடுப்பின்றி வெற்றிபெற்றது.
வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் அளித்த வாக்குகள் நொவினா ரைசில் உள்ள தேர்தல் துறையின் பன்னோக்கு மண்டபத்தில் எண்ணப்பட்டன. பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் அந்த வாக்குகள் எண்ணப்படுவதைக் காண அங்கு சென்றனர்.
பொதுவாக, வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் அளித்த வாக்குகளின் முடிவுகளில், உள்ளூர் வாக்களிப்பு முடிவுகளுடன் ஒப்பிடுகையில் அதிக வித்தியாசம் இல்லை. செம்பவாங் வெஸ்ட், புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதிகளுக்கான வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் அளித்த வாக்குகளின் முடிவுகள் மட்டும் அதற்கு விதிவிலக்கு.

