இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் தாங்கள் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியில் போட்டியிடப்போவதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ் டிரைவில் உள்ள ‘888 பிளாஸா’வில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடந்த உணவு விநியோக நிகழ்வின்போது அக்கட்சியின் தலைவர் பால் தம்பையா இத்தகவலை வெளியிட்டார்.
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியின் ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக) நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை வழிநடத்துபவர் பிரதமர் லாரன்ஸ் வோங். அவர் தலைமையிலான குழு, கடந்த 2020 பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் 63.18 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்தது.
இவ்வாண்டுத் தேர்தலில் பிரதமர் வோங்கை எதிர்த்துப் போட்டியிடக்கூடிய சாத்தியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பேராசிரியர் பால் தம்பையா, “அவர் (பிரதமர்) இம்முறையும் மார்சிலிங்-இயூ டீயில் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் சரி, இத்தொகுதிக்கு ஆகச் சிறந்த குழுவைக் களமிறக்குவதைத்தான் நாங்கள் ஆக முக்கியமாகக் கருதுகிறோம்,” என்று விவரித்தார்.
இதற்கிடையே, சீர்திருத்தத்துக்கான மக்கள் கூட்டணி (People’s Alliance for Reform (PAR)), பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் போட்டியிடும் என்று அதன் தலைமைச் செயலாளர் லிம் தியென் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.
மும்முனைப் போட்டி இடம்பெறுவதைத் தவிர்க்க பொத்தோங் பாசிரில் களமிறங்கவேண்டாம் என்று சிங்கப்பூர் மக்கள் கட்சி (எஸ்பிபி), சீர்திருத்தத்துக்கான மக்கள் கூட்டணியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இருந்தாலும் தாங்கள் அத்தொகுதியில் போட்டியிடப்போவதாக திரு லிம் கூறினார் என்று சிஎன்ஏ தெரிவித்துள்ளது.