நாம் இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ளது.
இந்நிலையில், கடந்த தேர்தலின் முக்கிய சில நிகழ்வுகளை நினைவுகூர்வோம்.
2020 ஜூலை 10ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதற்காக 23 ஜூன் 2020ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 30 ஜூன் 2020ல் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 1,527,491 வாக்குகளைப் பெற்றது. அது பதிவான மொத்த வாக்குகளில் 61.24%.
எதிர்த்தரப்பில் பாட்டாளிக் கட்சிக்கு 279,922 வாக்குகள் கிடைத்தன. அது 11.22%.
அந்த இரு கட்சிகளுக்கும் 2015 பொதுத் தேர்தலைக் காட்டிலும் குறைவான வாக்குகள் கிடைத்தன.
2020 தேர்தலில் புதிதாகப் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 10.18% விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது ஓர் அதிசய நிகழ்வு. மேலும், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் அந்தக் கட்சி கடுமையான போட்டியைக் கொடுத்தது.
அதுவரை ஆறு உறுப்பினர்களைக் கொண்டிருந்த அங் மோ கியோ, பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதிகள் ஐவர் அணிகளாக சிறிதாக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஆறு உறுப்பினர்கள் அணி சேரும் முறை கடந்த தேர்தலில்தான் கைவிடப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட செங்காங் குழுத்தொகுதியை பாட்டாளிக் கட்சி கைப்பற்றியது. 1988ல் குழுத்தொகுதி முறை ஏற்படுத்தப்பட்ட பிறகு புதிய குழுத்தொகுதி ஒன்றில் எதிர்க்கட்சி வென்றது அதுவே முதல்முறை.
மேலும், ஒரே தேர்தலில் இரு குழுத்தொகுதிகளில் எதிர்க்கட்சி வென்ற வரலாற்று நிகழ்வும் அப்போதுதான் நடந்தேறியது.
ஐவரைக் கொண்ட அல்ஜூனிட், நால்வரைக் கொண்ட செங்காங் ஆகிய இரு குழுத்தொகுதிகளில் பாட்டாளிக் கட்சி வென்றது.
ஹவ்காங் தனித்தொகுதியிலும் வென்றதன் மூலம் அந்தக் கட்சிக்கு பத்து இடங்கள் கிடைத்தன.
சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வரலாற்றில், 1966க்குப் பிறகு 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது அப்போதுதான்.
குழுத்தொகுதிகள் உட்பட 21 தொகுதிகளில் ஆளும் மக்கள் செயல் கட்சியுடன் பாட்டாளிக் கட்சி நேரடியாக மோதிய அதிசய நிகழ்வையும் கடந்த தேர்தல் சந்தித்தது.
சில வாக்களிப்பு நிலையங்களில் இரவு 8 மணியைக் கடந்தும் வாக்காளர் வரிசை காணப்பட்டதால், வரலாற்றில் முதல்முறை வாக்களிப்பு நேரம் இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டது.
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குப் பிறது இப்போது நான்கு தொகுதிகள் சேர்க்கப்பட்டதுபோல கடந்த தேர்தலிலும் நான்கு தொகுதிகள் இணைக்கப்பட்டு, 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான தேர்தல் பிரசாரங்கள் இணையம் வழியாக நடைபெற்றன.