தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தயார்நிலையில் 1,240 வாக்களிப்பு நிலையங்கள்

2 mins read
a4e56928-e0e1-4020-a259-0e3b5fc7f318
கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 1, புளோக் 608ல் வாக்களிப்பு நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

கடந்த ஒன்பது நாள்களாக வேட்பாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பம்பரமாகச் சுழன்று வாக்கு வேட்டையாடி வந்த நிலையில், வியாழக்கிழமையுடன் (மே 1) பிரசாரம் முடிவிற்கு வந்தது.

வெள்ளிக்கிழமை மே 2ஆம் தேதி பிரசார ஓய்வுநாளன்று வேட்பாளர்கள் ஓய்வெடுத்தபோதும் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

இம்முறை தீவு முழுவதும் மொத்தம் 1,240 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணி முதலே வாக்களிப்பு நிலையங்களை அமைக்கும் பணிகளைத் தேர்தல் அதிகாரிகள் தொடங்கினர்.

தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான திருவாட்டி நிக்கல் டியோ, 29, சக அதிகாரிகள் 21 பேருடன் சேர்ந்து பெண்டமியர் தொடக்கப் பள்ளியின் உணவுக்கூடத்தை வாக்களிப்பு நிலையமாக மாற்றும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டார். ஜாலான் புசார் குழுத்தொகுதிக்கு உட்பட்ட அந்த வாக்களிப்பு நிலையத்தில் 1,500 முதல் 1,600 பேர் வரை வாக்களிப்பர் என எதிர்பார்ப்பதாகத் திருவாட்டி டியோ கூறினார்.

அவரைப் போன்று ஏறக்குறைய 34,000 அரசாங்க ஊழியர்கள் இவ்வாண்டு பொதுத் தேர்தல் தொடர்பான வேட்புமனுத் தாக்கல், வாக்களிப்பு, வாக்கு எண்ணிக்கை போன்ற பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் துறை பேச்சாளர் தெரிவித்தார். பள்ளிகள், புளோக்குகளின் தரைத்தளத்திலுள்ள காலியிடங்கள், சமூக இடங்கள் போன்றவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நாளான மே 3ஆம் தேதி சனிக்கிழமை ஏறத்தாழ 2.6 மில்லியன் சிங்கப்பூரர்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிப்பு நிலையத்தில், தாங்கள் செல்ல வேண்டிய ஐந்து நிலையங்களைக் குறிக்கும் மஞ்சள் நிற அறிவிப்புப் பலகைகளையும் அவ்விடங்களுக்குச் செல்லும் வழியைக் காட்டும் அம்புக்குறிகளையும் வாக்காளர்கள் காணலாம். மூத்தோர், சக்கர நாற்காலிப் பயனாளர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் விரைந்து வாக்களிக்க ஏதுவாக முன்னுரிமை வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லுமுன் அங்குள்ள கூட்ட நிலவரம் குறித்து தேர்தல் துறை இணையத்தளம் அல்லது சிங்பாஸ் செயலி வழியாக வாக்காளர்கள் அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக, காலை வேளையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பிற்பகலில் வாக்களிக்கச் செல்லும்படி வாக்காளர்களைத் தேர்தல் துறை ஊக்குவிக்கிறது.

தானாக மையிட்டு நிரப்பும் ‘X’ முத்திரைகளைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும். ஆயினும், வாக்காளர்கள் தங்களது சொந்த பேனாவையும் பயன்படுத்தலாம். அல்லது, அங்குள்ள தேர்தல் அதிகாரியை அணுகி பேனாவைப் பெற்றுக்கொள்ளலாம். பல்வேறு வானிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில், நீர்க்கலன், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய மழையங்கி, பூச்சிவிரட்டித் தெளிப்பான் போன்றவற்றுடன் தேர்தல் அதிகாரிகள் ஆயத்தமாக இருக்கின்றனர்.

வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் அதிகாரிகளின் பணி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இரவு 9 மணிக்குள் அவர்களின் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணிவரை வாக்களிப்பு நடைபெறும் என்பதால், அதற்கிடையே நேரம் ஒதுக்கி தேர்தல் அதிகாரிகளும் வாக்களிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்