செங்காங் நகர மன்றத்தின் ஐந்தாண்டு பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக காம்பஸ்வேல் பூங்கா புதுப்பிக்கப்பட உள்ளது.
அந்தத் திட்டத்தை பாட்டாளிக் கட்சி நிர்வகிக்கும் செங்காங் நகர மன்றம் சனிக்கிழமை (ஏப்ரல் 5) அறிமுகம் செய்தது.
ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காம்பஸ்வேல் ஸ்திரீட்டில் அமைந்துள்ள 24 ஆண்டு பழைமை வாய்ந்த செங்காங் சிற்பப் பூங்கா புதுப் பொலிவு பெற உள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது.
ஆங்கர்வேலில் கூரையுடனான வண்ணத்துப்பூச்சி பூங்கா, புவாங்கோக்கில் தாவரவியல் பூங்கா, ரிவர்வேலில் நாய்களுக்கான ஓட்டப்பாதை போன்ற வசதிகளும் நகரமன்ற பெருந்திட்டத்தில் அடங்கும்.
மேலும், 96 நகர மேம்பாட்டுத் திட்டங்களையும் அது கொண்டுள்ளது. கூரையுடன் கூடிய புதிய நடைபாதைகள், விளையாட்டுத் திடல்கள், மக்கள் ஒன்றுகூடும் மையங்கள் போன்றவற்றையும் அங்கு அமைப்பது குறித்து செங்காங் நகரமன்றம் ஆராய்ந்து வருகிறது.
அந்தத் திட்டங்கள் அனைத்தையும் இந்த நிதி ஆண்டு தொடங்கி 2029 நிதி ஆண்டுக்குள் நிறைவேற்ற அது இலக்கு கொண்டுள்ளது.
பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், செங்காங் சிற்பப் பூங்காவில் புதிய பெருந்திட்டத் தொடக்க நிகழ்வு நடத்தப்பட்டு உள்ளது.
அதில் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவாட்டி ஹி டிங் ரு, திரு லூயிஸ் சுவா, இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
நால்வரைக் கொண்ட செங்காங் குழுத்தொகுதியில் ஒருவருக்கான இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை நிரப்பக்கூடும் என்று கணிக்கப்படும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் மூத்த சொத்து நிர்வாகியான அப்துல் முஹைமின் அப்துல் மாலிக், 35, அந்த நிகழ்வில் காணப்பட்டார்.
இப்போதுள்ள இதே மூவர் கொண்ட குழு வரும் தேர்தலிலும் போட்டியிடுமா என்று கேட்டபோது திரு சுவா நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி வென்றாலும் வேறு கட்சி வென்றாலும் செங்காங் நகர மன்றம் தனது வழக்கமான பணியைத் தொடரும் என்று மாண்டரின் மொழியில் அவர் கூறினார்.
“தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படுமா என்பதை என்னால் சொல்ல இயலாது. ஆயினும், நகரமன்றம் செய்ய வேண்டிய பணிகள் இவை,” என்றார் செங்காங் நகரமன்றத்தின் துணைத் தலைவருமான திரு சுவா.

