சிங்கப்பூர் ஐக்கியக் கட்சி (எஸ்யுபி) பொதுத் தேர்தல் தேர்தலில் அங் மோ கியோ குழுத்தொகுதி போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளது.
சொங் பூன் சந்தை, உணவு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) மேற்கொண்ட தொகுதி உலாவைத் தொடர்ந்து இதை அறிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆண்டி ஜு, மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் (மசெக) அணிக்கு எதிராக பெரும்பாலும் சிங்கப்பூர் ஐக்கியக் கட்சி அணியைத் தாம் வழிநடத்தலாம் என்றும் கூறினார்.
இதனால், அங் மோ கியோவில் மும்முனைப் போட்டியை எதிர்பார்க்கலாம். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதி அணியை களமிறக்கப்போவதாக மக்கள் சக்திக் கட்சி (பிபிபி) ஒருநாள் முன்னதாக அறிவித்திருந்தது.
சிங்கப்பூர் ஐக்கிய கட்சி 2020 டிசம்பரில் உருவாக்கப்பட்டது. இது அதன் முதல் தேர்தல். எனினும், அதன் முக்கிய உறுப்பினர்கள் 2020 தேர்தலில் சீர்திருத்தக் கட்சியின்கீழ் அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிட்டனர். அந்த அணி 28.09% வாக்குகளைப் பெற்றது.
திரு ஜு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டேரன் சோ, பொருளாளர் திருவாட்டி. நொராய்னி யுனுஸ் ஆகிய அந்த அணியின் மூன்று உறுப்பினர்கள் இப்போது எஸ்யுபியில் உள்ளனர். மூவரும் தொகுதி உலாவிற்கு வந்திருந்தனர்.
“அங் மோ கியோ தொகுதியில் வேட்பாளராக இருந்த அனுபவத்திலிருந்து, மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு இருக்கிறது என்று கூறுவேன். மூத்த அமைச்சர் லீயின் தொகுதியில் போட்டியிடுவதை ஒரு சிரமமாக கருதவில்லை. நான் அங் மோ கியோ குழுத்தொகுதி குடியிருப்பாளர்களை பிரதிநிதிக்கிறேன்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய 42 வயது சொத்து முகவரான திரு ஜு கூறினார்.
அங் மோ கியோ குழுத்தொகுதி மும்முனைப் போட்டியைத் தவிர்ப்பதற்காக அண்மையில் மக்கள் சக்தி கட்சி (பிபிபி) உடன் பேசியதாகவும் ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்ற திரு ஜு, “மும்முனைப் போட்டியைத் தவிர்க்க அவர்களுடன் நாங்கள் பேசுவோம் என்று மட்டும் இப்போது என்னால் சொல்ல முடியும்,” என்றார்.