நிதி, உடல்நலம் சார்ந்த விவகாரங்களில், 30 வயதுக்குட்பட்ட ‘ஜென் ஸி’ (Gen Z) தலைமுறையினர் தங்களின் பெற்றோர் அல்லது அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரை விடக் குறைந்த மீள்திறன் கொண்டிருப்பதாக ஏஐஏ (AIA) காப்புறுதி நிறுவனம் நடத்திய வட்டாரக் கருத்தாய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
வேலைக்குச் செல்லும் ‘ஜென் ஸி’களில் 41 விழுக்காட்டினர் மட்டுமே தங்களின் நிதிநிலை நன்றாக இருப்பதாகக் கருதுகின்றனர்; ஆனால், 62 முதல் 84 வயதுக்குட்பட்டோரில் இந்த அளவு 54 விழுக்காடாக உள்ளது.
மன, உடல்நல நல்வாழ்விலும் இளையர்கள் முதியோரிடம் பின்தங்கியுள்ளனர். இதனால், அவர்களை அழுத்தங்களைத் தாங்காத ‘ஸ்ட்ராபெர்ரி தலைமுறையினர்’ என மூத்தோர் அழைக்கின்றனர்.
தலைமுறை முரண்பாடுகள்
பண விவகாரங்கள், சமூகக் கோட்பாடுகளைக் கையாள்வதில் இரு தலைமுறைகளுக்கும் இடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. மூத்தோரில் 63 விழுக்காட்டினர் தங்களின் வயதான பெற்றோரை ஆதரிக்காதவர்களை ‘நன்றி உணர்வு இல்லாதவர்கள்’ என்று சாடுகின்றனர்.
மாறாக, ‘ஜென் ஜி’ களில் 61 விழுக்காட்டினர், பிள்ளைகளுக்குச் சொந்த நிதிப் பொறுப்புகள் இருப்பதால் பெற்றோரை ஆதரிப்பது கட்டாயமில்லை என்று கருதுகின்றனர்.
மேலும், வாழ்க்கையின் வெற்றி என்பது பணத்தைச் சார்ந்ததன்று என 63 விழுக்காட்டு இளையர்கள் நம்புகின்றனர்; ஆனால், மூத்தோரில் பாதிப் பேர் ஒருவரின் நன்மதிப்பை அவரது செல்வமே தீர்மானிப்பதாக எண்ணுகின்றனர்.
பெற்றோரின் செல்வாக்கும் எதிர்காலமும்
இளைய சிங்கப்பூரர்களிடம் பெற்றோரின் செல்வத்தைச் சார்ந்திருக்கும் போக்கு அதிகமாக உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
24 வயதுக்குட்பட்டோரில் 62 விழுக்காட்டினர் தங்களுக்குப் பரம்பரைச் சொத்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வீடுகளை வாங்கிக் கொடுத்து, அவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதே அதற்குக் காரணமாகும்.
இருப்பினும், பெற்றோரின் மிதமிஞ்சிய கவனிப்பால்தான் பிள்ளைகளின் மீள்திறன் குறைகிறது என்பதால், ஒட்டுமொத்த ‘ஜென் ஜி’ தலைமுறையினரையும் குறை கூறுவது முறையன்று. பிள்ளைகளுக்குப் பெரும் சொத்துகளை விட்டுச் செல்வதில் தவறில்லை; அதே வேளையில், அது அவர்களின் சுய உழைப்பால் மேலும் வெற்றியடைவதற்கான ஆர்வத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்பதே இக்கருத்தாய்வு மூலம் நாம் அறிந்துகொள்ளும் முக்கியக் கருத்தாகும்.

