பரம்பரை வரலாற்று நூல்களை தேசிய நூலகத்திற்கு நன்கொடையாக வழங்க கோரிக்கை

1 mins read
b1967cdc-3077-4ee5-a9c6-1b0b7707655d
சிங்கப்பூரர்களிடையே மரபாய்வு தொடர்பான ஆர்வத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செப்டம்பர் 21ஆம் தேதி தேசிய நூலக வாரியமும் சிங்கப்பூர் மரபாய்வுச் சங்கமும் கையெழுத்திட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கலந்துரையாடல்கள், பயிலரங்குகள், கண்காட்சிகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்து சிங்கப்பூரர்களிடையே மரபாய்வு தொடர்பான ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் செப்டம்பர் 21ஆம் தேதி தேசிய நூலக வாரியமும் சிங்கப்பூர் மரபாய்வுச் சங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

நன்கொடைவழி தேசிய நூலக வாரியத்தின் மரபாய்வு நூல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சங்கம் உதவும்.

முன்னதாக, சிங்கப்பூர் மரபாய்வுச் சங்கம் விடுத்த கோரிக்கையை அடுத்து தேசிய நூலக வாரியத்திற்கு இதுவரை பரம்பரை வரலாறு தொடர்பான எட்டு நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

“மதிப்புமிக்க இந்த ஆவணங்களை இழக்கும் சாத்தியத்தைக் குறைக்க சங்கம் முயன்று வருகிறது. இந்த ஆவணங்களை வைத்திருப்போர் எங்களின் மூலம் தேசிய நூலக வாரியத்திற்கு நன்கொடை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் சங்கத்தின் தலைவர் திரு இங் யூ காங்.

சீனாவிலிருந்து நன்கொடையாகப் பெற்ற இரண்டு மரபாய்வு நூல்களை திரு இங் நன்கொடையாக வழங்கியுள்ளார். இவற்றில் ஒரு நூலில் புகழ்பெற்ற சிங்கப்பூரர்களில் ஒருவரான மறைந்த வர்த்தகர் கூ டெக் புவாட்டின் குடும்ப வரலாறு குறித்து இடம்பெற்றுள்ளது.

நன்கொடையாக வழங்கப்படும் ஆவணங்கள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வையிடக்கூடிய லீ கொங் சியன் மேற்கோள் நூலகத்தில் வைக்கப்படும் என்று நூலக வாரியத்தின் இயக்குநர் திருவாட்டி அலிஷியா இயோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்