எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் மீண்டும் களமிறங்கவிருப்பதாகக் கூறினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
அத்தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 12) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு வோங், சிங்கப்பூர்ப் பிரதமராக முதல்முறையாக இந்தத் தேர்தலில் களமிறங்குவதாகக் குறிப்பிட்டார்.
மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம், திருவாட்டி ஹெனி சோ ஆகியோர் தொடர்ந்து பிரதமருடன் மார்சிலிங் - இயூ டீ மசெக வேட்பாளர்களாகக் களம்காணவுள்ளனர்.
“மற்ற குழுத்தொகுதிகளில் மாற்றங்களை எதிபார்க்கலாம்,” என்ற பிரதமர் வோங், பத்தாண்டுகளாக மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் தொடர்ந்து சேவையாற்றிவரும் தமக்கு பிரதமராக அங்குப் போட்டியிடுவது முதல் அனுபவம் என்றார்.
“வரும் தேர்தல் தேசிய அளவில் மிக பரபரப்பான ஒன்றாக இருக்கப்போகிறது. மக்களுக்குச் சேவையாற்ற நாங்கள் சிறந்த முறையில் பங்காற்றுவோம்,” என்று உறுதியுடன் இருப்பதாக அவர் சொன்னார்.
சனிக்கிழமை காலை இயூ டீ வட்டாரத்தில் நடைபெற்ற ‘மை ஃபேமிலி கார்னிவல்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு வோங், சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘எஸ்ஜி60’ குழந்தை அன்பளிப்புத் தொகுப்புத் திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்துவைத்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் பிறந்த அல்லது இனிமேல் பிறக்கவுள்ள குழந்தைகளுக்காக நாட்டின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாட ‘எஸ்ஜி60’ குழந்தை அன்பளிப்புத் திட்டம் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குறைந்தது 5,300 குடும்பங்கள் அந்த அன்பளிப்பைப் பெற பதிவுசெய்துள்ளன.
“அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள பல தம்பதிகள் விரும்பினாலும் செலவுகள் ஒரு சவாலாக இருக்கின்றன,” என்ற திரு வோங், சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தருவதில் அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என்றார்.
தம்முடைய முதல் குழந்தையை வரும் மே மாதம் எதிர்பார்க்கும் அகிலாண்டேஸ்வரி இளங்கோவன், 30, எஸ்ஜி60 குழந்தை தொகுப்புத் திட்டத்தைப் பாராட்டினார்.
“இளம் தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிக்க இது ஒரு நல்ல முயற்சி,” என்றார் அவர்.
குடும்பச் செலவுகளை நிர்வகிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் $800 மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்தபடி வழங்கப்படும் என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.
“நிச்சயமற்ற சூழல் எதுவாயினும் சிங்கப்பூர் ஓர் ஒற்றுமையான, நிலைத்தன்மைமிக்க நாடாகத் தொடர்ந்து இருக்க நாம் அனைவரும் உறுதிகொள்வோம்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குடும்பங்கள் தங்கள் எஸ்ஜி60 குழந்தை அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ள go.gov.sg/SG60BabyGift என்ற இணையத்தளம் வழியாகப் பதிவுசெய்யலாம்.