சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைக் கையாள புதிய திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமான வழிகாட்டி நூலான ‘தி ஏஐ ஃபேக்டரி-ஏஐ கேப்பபிலிட்டி கயிட் ஃபார் எஸ்எம்இஸ்’ செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) வெளியிடப்பட்டது.
தொழில்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், அனுபவங்கள் ஆகியவற்றை வழிகாட்டி நூல் கொண்டுள்ளது.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான சங்கம் நடத்தும் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பயிற்சிக் கழகத்தில் இந்நூல் முக்கிய கற்பித்தல் வளமாகப் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய பட்டயச் சான்றிதழ் திட்டங்களை வழங்க சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பயிற்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அத்தகைய புதிய திட்டம் ஒன்று 2026ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய திட்டம் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான சங்கம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பயிற்சிக் கழகம், ஸ்ட்ரெய்ட்ஸ் இன்டராக்டிவ் எனப்படும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதலைப் பெறவும் எதிர்காலத்தை வடிவமைக்கவும் புதிய வழிகாட்டி நூல் முக்கிய கருவியாகத் திகழும் என்றும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் உதவி தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே கூறினார்.
செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்ற உணர்வு ஊழியர்களுக்கு ஏற்படக்கூடாது என்றும் மாறாக அது தங்கள் ஆற்றலை வலுப்படுத்துவதாக அவர்கள் உணர வேண்டும் என்றும் பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு டே தெரிவித்தார்.

