ஜார்ஜ் சுப்பையாவின் வாழ்க்கை, பண்புகளைக் கற்றுத் தருகிறது: தர்மன்

ஜார்ஜ் சுப்பையாவின் வாழ்க்கை, பண்புகளைக் கற்றுத் தருகிறது: தர்மன்

2 mins read
88ab4dad-2ac0-41f0-9d89-4d4b25610213
‘பியோண்ட் தி விசல்’ நூல் வெளியீட்டு விழாவில் நூல் பிரதியைப் பெற்றுக்கொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் (இடமிருந்து) அமரர் ஜார்ஜ் சுப்பையாவின் பேரன் ஜே.கே. சரவணா, மகள் ஷாமினி சுப்பையா, மருமகள் வோய் சொங். - படம்: பே.கார்த்திகேயன்
Google News Preferred Icon

1974ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி, எதிர்பாராத காரணங்களுக்காக சிங்கப்பூரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

போலந்து, ஹைட்டி அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று ஆட்டத்திற்கு வரலாற்றில் முதன்முறையாக ஒரு சிங்கப்பூரர் நடுவராகச் செயல்பட்டார்.

அனைவராலும் அன்பாக ‘ஜார்ஜ் சுப்பையா’ என்று அழைக்கப்பட்ட கோவிந்தசாமி சுப்பையா, ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் நடுவராக விளங்கிய முதல் ஆசியரும் ஆவார்.

மேலும் இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் துணை நடுவராகவும் அவர் பணியாற்றினார்.

அமரர் சுப்பையாவின் வாழ்க்கை, பண்புகளைக் கற்றுத் தரும் ஒரு வாழ்வியல் பாடம் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

“அவர் ஒரு காற்பந்துப் பயிற்சியாளர் மட்டுமல்லர். தமது ஓய்வுக்காலத்திலும் பலருக்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்,” என்று திரு தர்மன் புகழாரம் சூட்டினார்.

மறைந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகும் அமரர் சுப்பையா விட்டுச்சென்றுள்ள கதைகளையும் அனுபவங்களை விவரிக்கும் ‘பியோண்ட் தி விசல்’ (Beyond the Whistle) என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்டது.

அதில் திரு தர்மன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நூலை வழங்கிய திரு சுப்பையாவின் மகள் ஷாமினி சுப்பையா, தம் தந்தை வாழ்நாள் முழுவதும் மிகவும் ஒழுக்கமானவராக இருந்ததை நினைவுகூர்ந்தார்.

“அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவது ஒரு கனவாக இருந்து வருகிறது. விளையாட்டுத் துறையில் கனவுகளைக் கொண்ட எவருக்கும் இந்த நூல் ஓர் உத்வேகமாக அமைய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

திரு சுப்பையாவின் வாழ்க்கையைப் பற்றிய அவரின் குடும்பத்தினரின் பதிவுகள், அறிக்கைகள், ஆய்வைத் தொகுக்க கிட்டத்தட்ட ஓராண்டு எடுத்தது என்று தெரிவித்தார் எழுத்தாளரும் சுப்பையா குடும்பத்தின் நண்பருமான நஸிமா ராம்.

“நூல் வெளியீட்டின் ஒரு பகுதியாக இருந்ததைக் கௌரவமாகக் கருதுகிறேன்,” என்றார் அவர்.

இதற்கிடையே, இளம் சிங்கப்பூர் விளையாட்டாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ‘ஜார்ஜ் சுப்பையா விளையாட்டுத் திறமை நிதி’ அறிமுகம் கண்டது.

“இளையர்கள், குறிப்பாக, இந்திய இளையர்கள் விளையாட்டுத் துறையில் மேலும் சிறந்து விளங்க இந்த நிதி உதவும்,” என்றார் திரு சுப்பையாவின் பேரனும் நூலின் பதிப்பாசிரியருமான ஜே.கே.சரவணா.

சிங்கப்பூரிலிருந்து போர்ச்சுகல் சென்று தமது காற்பந்துக் கனவுகளைத் தொடரும் கிரிஷவ் ராம், இந்த நிதி தம்மைப் போன்ற இளையர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றார்.

“நிதிச்சூழல், விளையாட்டுக்கு என்றுமே ஒரு தடையாக இருக்கக்கூடாது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
அதிபர் தர்மன்காற்பந்துநூல் வெளியீடு