முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ, வில்மார் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் 100,000 பங்குகளை வாங்கியுள்ளார். இதன் மூலம் அந்த விவசாய வர்த்தகத் துறை நிறுவனத்தில் அவரது மொத்த பங்குகள் ஒரு மில்லியனுக்கும் மேலாக உயர்ந்துள்ளன.
வில்மார் நிறுவனத்தின் சுயேச்சை இயக்குநரான திரு இயோ, புதன்கிழமை (நவம்பர் 4) திறந்த சந்தையில் ஒரு பங்கிற்கு $2.97 வீதம் பங்குகளை வாங்கியதாக சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை தாக்கல் செய்துள்ள ஆவணத்தின்படி தெரிய வருகிறது.
இந்தோனீசியாவில் செம்பனைப் பயிரிடும் நில உரிமங்களைக் கொண்டுள்ள வில்மார் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் 14 விழுக்காட்டுக்கும் மேலாகச் சரிவடைந்துள்ளது.
சிங்கப்பூரை மிகக் கடுமையாகப் பாதித்த எல்லை தாண்டிய புகைமூட்டம் மோசமடைந்த நிலையில், சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட பத்து நிறுவனங்களுக்கு தேசியச் சுற்றுப்புற அமைப்பு அக்டோபர் 23ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியது.
அவற்றுள் வில்மார் நிறுவனமும் ஒன்றாகும். நிறுவனத் தொடர்புகள், இந்தோனீசிய நில உரிமங்கள், தீத்தடுப்பு, தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களையும் தகவல்களையும் அமைப்பு கோரியிருந்தது.
சிங்கப்பூரையும் மலேசியாவையும் பாதித்த புகைமூட்டத்துக்குக் காரணமான இந்தோனீசியக் காட்டுத்தீயுடன் வில்மார் குழுமத்துக்கு ஏதேனும் தொடர்போ பங்கோ உள்ளதா என்பதை மதிப்பிடுவதற்காக, ‘கன்ட்ரோல் ரிஸ்க்ஸ் குரூப்’ நிறுவனத்தை மதிப்பீட்டாளராக தேசியச் சுற்றுப்புற அமைப்பு நியமித்ததை ஏற்றுக்கொண்டதாக வில்மார் நவம்பர் 2 ஆம் தேதி தெரிவித்தது.
அம்மதிப்பீட்டாளருக்கு சட்ட ஆலோசகராக ‘டெண்டன்ஸ் ரோடிக் அண்ட் டேவிட்சன்’ நிறுவனம் நியமிக்கப்பட்டது. திரு இயோ 2024 ஏப்ரலில் வில்மார் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்டார். மேலும் அவர் கெரி குழும நிறுவனங்களிலும் உயர் நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். வில்மார், கெரி இரு நிறுவனங்களும் மலேசியாவின் குவோக் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை.
