செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆதிக்கம் செலுத்தும் இந்தப் புதிய காலத்திற்கு மாணவர்கள் தீவிரமாக ஆயத்தமாக வேண்டும் என்றும் அதற்குத் தேவையான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற 2026ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர்த் தொழில்துறை உபகாரச் சம்பளம் (எஸ்ஜிஐஎஸ்) வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரு லீ உரையாற்றினார்.
தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் அனைவர்க்காகவும் செயற்கை நுண்ணறிவுத்திறன் கட்டமைப்பை உருவாக்கவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
‘‘இதன்மூலம், மாணவர்கள் தற்போதும் எதிர்காலத்திலும் ஏஐ வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வலுவான, சீரான அடித்தளத்தைப் பெற முடியும்,’ என்றார் திரு லீ.
தனித்துவமிக்க நற்பண்புகள்
இருப்பினும், ‘ஏஐ‘ தொழில்நுட்பத்தை விடவும் எளிதில் மாற்றீடு செய்ய முடியாத மனித நற்பண்புகளும் அடிப்படை வாழ்வியல் திறன்களுமே மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் தொழில்முறை வெற்றிக்கும் மிக முக்கிய காரணமாகத் திகழும் என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
‘‘ஆழ்ந்த அறிவும் தொழில்நுட்பத் திறன்களும் எப்போதும் முக்கியமானவைதான். ஆனால், செயற்கை நுண்ணறிவால் அவ்வளவு எளிதில் ஈடுசெய்ய முடியாத மனிதத் திறன்களும் நற்பண்புகளுமே வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தொழிலுக்கும் மேலும் வலுசேர்க்கும்,’’ என்று அவர் சுட்டினார்.
அவ்வகையில், சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான அவர், மாணவர்கள் பேண வேண்டிய வாழ்க்கைத் திறன்களையும் தம் உரையின்போது பட்டியலிட்டார்.
நான்கு முக்கியத் திறன்கள்
பழைய தொழில்நுட்பங்கள் மாறும்போதெல்லாம் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் மீள்திறன், பல்வேறு துறை சார்ந்த கருத்துகளை ஒன்றிணைத்துச் சிந்திக்கும் ஒருங்கிணைப்புத் திறன், திறமைகளைச் சமுதாய நலனுக்காகப் பயன்படுத்தும் பொறுப்புணர்வு, மற்றவர்களை மரியாதையுடனும் பரிவுடனும் நடத்தும் கருணை ஆகியவையே அமைச்சர் குறிப்பிட்ட (R-I-S-E) அந்த முக்கியத் திறன்கள்.
இந்தப் பண்புகளை வளர்த்துக்கொண்டு மாணவர்கள் சவால்களை வெல்ல வேண்டும் என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.
அரசாங்கமும் உள்ளூர்த் தொழில்துறை நிறுவனங்களும் இணைந்து வழங்கும் பலதுறைக் கல்வி உதவித்தொகையான ‘எஸ்ஜிஐஎஸ்’, இவ்வாண்டு அதன் 15வது ஆண்டைக் கொண்டாடுகிறது. தொடங்கப்பட்டதிலிருந்து இம்முறைதான் ஆக அதிகமாக 210 மாணவர்களுக்கு ‘எஸ்ஜிஐஎஸ்’ உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டன.
அத்திட்டத்தின்மூலம் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அவ்வகையில், நிகழ்ச்சியில் உபகாரச் சம்பளம் பெற்றவர்களில் ஒருவரான சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவரான முஹம்மது ஆரிஃபீன் இஸ்கந்தர் ஷா 24, இந்த விருது வருங்காலத் தொழில்துறைத் தலைவராகத் தம்மை வார்த்தெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
‘‘சமூகத்திற்கு நிலையான வகையில் பங்களிக்க தலைமைத்துவப் பண்பு அவசியம். கல்வியுடன் சவால்களைச் சமாளிக்க தேவையான பண்புகள், நிபுணத்துவத் திறன்களை வளர்த்துக்கொள்ள இத்தகைய விருதுகள் வழங்கப்படுகின்றன.
‘‘அதனைச் செம்மையாகப் பயன்படுத்தி, பிறர் வாழ்விற்கும் சமூகத்திற்கும் நற்பணியாற்றுவோம் என்று நம்பிக் கொடுக்கப்படும் இவ்விருது, மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட்டு இலக்குகளை எட்ட பேருதவி புரியும்,’’ என்று ஆரிஃபீன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

