‘ஐசிஏ’வுக்கு கைகொடுக்கும் புதிய இயந்திர மனிதர்கள்

ஐந்தே நிமிடங்களில் கடப்பிதழ், அடையாள அட்டை

2 mins read
cdb30849-419b-495a-a55c-87719a512f7d
ஐசிஏ சேவை நிலையத்தின் மத்திய களஞ்சியத்தில் கடப்பிதழை மீட்டெடுக்கும் இயந்திர மனிதன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) தானியக்கச் சேவைக் கூடங்கள் மூலம் புதிய கடப்பிதழ் அல்லது அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள இப்போது வெறும் ஐந்து நிமிடங்களே தேவைப்படுகிறது. ஒப்புநோக்க, இதற்கு முன்னர் 11 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இயந்திர மனிதர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுக்குகளிலிருந்து இந்த அடையாள ஆவணங்களைப் பெற்று இவற்றைத் தானியக்க இயந்திரங்களிடம் அவை விநியோகிக்கின்றன.

‘ஐரோபோ+’ இயந்திர மனிதனால் (முன்னணியில்) ஒரே நேரத்தில் பத்து கடப்பிதழ்கள் அல்லது அடையாள அட்டைகளைக் கொண்டுசெல்ல முடியும். ‘ஐரோபோ’ இயந்திர மனிதனும்  (பின்னணியில்) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
‘ஐரோபோ+’ இயந்திர மனிதனால் (முன்னணியில்) ஒரே நேரத்தில் பத்து கடப்பிதழ்கள் அல்லது அடையாள அட்டைகளைக் கொண்டுசெல்ல முடியும். ‘ஐரோபோ’ இயந்திர மனிதனும் (பின்னணியில்) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2025 ஜூலையில் தொடங்கப்பட்ட ஆணையத்தின் ஒருங்கிணைந்த அறிவார்ந்த ஆவண நிர்வாக முறையின் (ஐஸ்மார்ட்) ஒரு பகுதியாக, 100க்கும் மேற்பட்ட வட்ட வடிவிலான இந்தக் கருவிகள் அங்கம் வகிக்கின்றன.

கிராவ்ஃபர்ட் ஸ்திரீட்டில் உள்ள ஐசிஏ சேவை நிலையத்தில் பயன்பாட்டில் உள்ள இந்தத் தானியக்க முறையைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு டிசம்பர் 22ஆம் தேதி அங்கு சென்றது.

2025 ஏப்ரலில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் பழைய ஐசிஏ கட்டடத்துக்கு அருகே உள்ளது.

தானியக்கக் கூடங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்குமுன், மக்கள் தங்கள் அடையாள ஆவணங்களைப் பெற நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக நிலையத்தின் வாடிக்கையாளர் செயல்பாட்டுப் பிரிவின் மூத்த மேலாளர் அருணா முருகையா கூறினார்.

இயந்திர மனிதர்களைக் கைகளில் ஏந்தியிருக்கும் ஐசிஏ சேவை நிலையத்தின் வாடிக்கையாளர் செயல்பாட்டுப் பிரிவின் மூத்த மேலாளர் அருணா முருகையா, துணைக் கண்காணிப்பாளர் ஜெரால்ட் வூ.
இயந்திர மனிதர்களைக் கைகளில் ஏந்தியிருக்கும் ஐசிஏ சேவை நிலையத்தின் வாடிக்கையாளர் செயல்பாட்டுப் பிரிவின் மூத்த மேலாளர் அருணா முருகையா, துணைக் கண்காணிப்பாளர் ஜெரால்ட் வூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடப்பிதழ் காணாமல் போனது அல்லது சேதமடைந்தது போன்ற சிக்கலான சூழல்களை எதிர்கொண்டவர்களுக்குப் பின்னால் வரிசையில் அவர்கள் நிற்கவும் நேரிட்டது.

கடப்பிதழ்களும் அடையாள அட்டைகளும் தயாரிக்கப்பட்டவுடன் அவற்றை அதிகாரிகள் தாங்களாகவே சேமித்து வைக்க வேண்டியிருந்தது.

அவற்றைப் பெற்றுக்கொள்ள உரியவர் வரும்போது, அதிகாரிகள் அவற்றைத் தேடி எடுக்க மெனக்கெட வேண்டியிருந்தது.

இது, அதிகாரிகளுக்கு சவால்மிக்கதாக இருந்ததை ஐசிஏவின் கொள்கை, மேம்பாட்டுப் பிரிவில் மின்னிலக்க ஆற்றல் மேம்பாட்டுக்கான மூத்த மேலாளரான துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஜெரால்ட் வூ சுட்டினார்.

ஐஸ்மார்ட் முறை மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான வழிமுறைகளை ஐசிஏ 2019ல் ஆராயத் தொடங்கியது.

தீர்வைக் கண்டுபிடிக்க டிஎஸ்பி வூவின் குழு, அருணாவின் குழு, உள்துறை அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, வெளிப்புற விற்பனையாளர் ஆகியவற்றுக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டன.

ஐசிஏ சேவை நிலையத்தில் தானியக்கக் கூடங்களைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த தேதியில் அவர்கள் எந்த நேரத்திலும் வரலாம்.

கூடத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்தவுடன், அவர்களின் அடையாள ஆவணங்களைப் பெற இயந்திர மனிதன் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய அடையாள ஆவணத்தைத் தானியக்கக் கூடத்தினுள் செலுத்த வேண்டும். பழைய ஆவணத்தைச் செல்லாததாக்க அதில் ஓட்டையிடப்படும். இந்தச் செயல்முறைக்கு வழிகாட்ட ஐசிஏ அதிகாரிகள் அங்கு இருப்பர்.

ஐஸ்மார்ட் முறை நடப்புக்கு வருவதற்குமுன்னர், ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களைக் கையாள 20 அதிகாரிகள் தேவை. இப்போது, 20 தானியக்கக் கூடங்களை மேற்பார்வையிட ஐந்து அதிகாரிகளே போதும்.

குறிப்புச் சொற்கள்