‘கெட்கோ’ கார்களை மலேசியாவுக்கு ஓட்டிச் செல்லலாம்

‘கெட்கோ’ கார்களை மலேசியாவுக்கு ஓட்டிச் செல்லலாம்

2 mins read
கெட்கோ வாகனப் பகிர்வுச் சேவை நிறுவனத்தில் எல்லை தாண்டிய சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது
aeb2f0eb-8443-4ba2-b841-6add6188d597
‘கெட்கோ’ செயலியைப் பயன்படுத்தி வாகனங்களை முன்பதிவு செய்து மலேசியாவுக்கு ஓட்டிச் செல்லலாம். - கோப்புப் படம்: சாவ் பாவ்
Google News Preferred Icon

‘கெட்கோ’ (GetGo) வாகனப் பகிர்வுச் சேவையைப் பயன்படுத்தும் தகுதியுடைய வாடிக்கையாளர்கள், இனி அந்நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்தி வாகனங்களை முன்பதிவு செய்து மலேசியாவுக்கு ஓட்டிச் செல்லலாம்.

‘டிரைவ் டு மலேசியா’ (Drive to Malaysia) எனும் புதிய எல்லை தாண்டிய சேவை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம் பயனீட்டாளர்கள் மலேசியாவில் எங்கு வேண்டுமானாலும் வாகனம் ஓட்ட முடியும். முன்பணம் கட்டத் தேவையில்லை என்பதுடன், பயணக் கட்டணத்தில் கிலோமீட்டர் கணக்கிலான கட்டணமும் கிடையாது.

வழமையான கார் வாடகை முறையிலுள்ள முன்பணம் செலுத்துதல், வாகனத்தை நேரில் சென்று பெறுதல் போன்ற சிரமங்களை அகற்றுவதே இதன் நோக்கம் என்று ‘கெட் கோ’ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேரக் கட்டணத்தில் 30 விழுக்காடு எல்லை தாண்டிய கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இது வாகன வகை, பயண நாளுக்கேற்ப கணக்கிடப்படும்.

‘செலக்ட்’ கார்களுக்கு வாரநாள்கள், பொது விடுமுறைக்கு முந்தைய நாள்களில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக $20, வார இறுதி பொது விடுமுறை நாள்களில் $30 ஆக கட்டணம் இருக்கும். ‘பிளஸ்’ வாகனங்களுக்கு வாரநாள்களில் அதிகபட்சமாக $25, வார இறுதி, பொது விடுமுறை நாள்களில் $35 ஆக கட்டணம் இருக்கும்.

குறைந்தபட்ச முன்பதிவு நேரம் 12 மணிநேரம். அதிகபட்சம் 5 நாள்கள் வரை வாகனத்தைப் பயன்படுத்தலாம். 30 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்.

இத்திட்டத்தை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு முன்னர் கெட் கோ வாடிக்கையாளர்களுக்கு முன்னோடித் திட்டமாக இத்திட்டத்தைச் செயல்படுத்தியது. 48 மணி நேரத்திற்குள் ஏறத்தாழ 2,000 பேர் ஆர்வம் காட்டினர்.

சிங்கப்பூரின் 1,700 இடங்களில் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ‘கெட் கோ’ கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வாகனம்தனியார் வாடகை கார்மலேசியாஎல்லைபகிர்வு