கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) சர்க்கிட் ரோட்டில் ஒரு மாதைப் பலிவாங்கிய விபத்து தொடர்பில் இரண்டாவது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகுந்த உரிமமும் காப்புறுதியுமின்றி 40 வயது ஆடவர் ஒருவரை வாகனம் ஓட்ட அனுமதித்த சந்தேகத்தின்பேரில் அந்த 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை திங்கட்கிழமை (ஜூலை 14) தெரிவித்தது.
விபத்துக்குள்ளான காரின் முன்பயணி இருக்கையில் அந்த ஆடவர் அமர்ந்திருந்தார். அவர்தான் அந்த காரை வாடகைக்கு எடுத்ததாக நம்பப்படுகிறது. விசாரணை தொடர்கிறது.
சர்க்கிட் ரோடு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 52Aல் வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) தெரிவித்தது. விபத்தில் சிக்கிய 66 மாது கொல்லப்பட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் சம்பவ இடத்தில் உறுதிப்படுத்தினார்.
காரின் ஓட்டுநர் அந்த மாதுக்கு உதவவில்லை என்றும் அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்றும் காவல்துறை தெரிவித்தது. பின்னர் போக்குவரத்துக் காவல்துறை அவரைக் கைது செய்தது.
அவரிடம் தகுந்த ஓட்டுநர் உரிமம் இல்லாததைப் போக்குவரத்துக் காவல்தறை கண்டறிந்தது.