ஜயன்ட் பேரங்காடி குழுமம் பீஷானின் இயங்கிவந்த அதன் கடையைக் கடந்த ஆகஸ்ட் மாதம் மூடியது. அதிகரித்துவரும் செலவீனம், வர்த்தகப் போட்டி ஆகியவற்றிற்கு மத்தியில் அதன் வணிகச் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பல ஊகங்கள் பரவின.
அதை நிரூபிக்கும் வகையில், சிங்கப்பூரின் பிரபல பேரங்காடிகளில் ஒன்றான ஷெங் சியோங் புளோக் 512 பீஷான் எனும் பகுதியில் காலியாக இருந்த சில்லறை விற்பனை இடத்தைக் கைப்பற்றி, ஒரு மாதத்திற்குள் புதிய பேரங்காடி ஒன்றைத் திறந்தது.
சில நாள்களுக்குப் பிறகு,ஃபேர் பிரைஸ் நிறுவனம் புளோக் 510க்கு அருகில் செயல்பட்டுவந்த அதன் பேரங்காடியைப் புதுப்பித்து மீண்டும் புதுப்பொலிவுடன் திறந்தது.
இவ்வாண்டில் இதுவரை, ஜயன்ட் பேரங்காடி குழுமம் வெவ்வேறு இடங்களில் செயல்பட்ட அதன் 11 பேரங்காடிகளை மூடியது. அண்மையில், நவம்பர் 24ஆம் தேதி மூடப்பட்ட பாயா லேபர் ஸ்குயர் பேரங்காடியும் அவற்றில் ஒன்று.
பீஷான், பாயா லேபர்ஆகிய வட்டாரங்களில் இருந்த கடைகளைத் தவிர, செம்பவாங், அங் மோ கியோ, தோ பாயோ ஆகிய பகுதிகளில் இருந்த பேரங்காடிகளும் பாசிர் ரிஸ், பொங்கோல் போன்ற இடங்களில் செயல்பட்ட பல சிறிய கடைகளும் மூடப்பட்டன.
அதிகரித்து வரும் பணவீக்கம், கடுமையான போட்டி இருந்தபோதிலும், சிங்கப்பூரில் இருக்கும் தனது பேரங்காடிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஜயன்ட் பேரங்காடி குழுமம் கூறியுள்ளது.
“சிங்கப்பூரர்கள் நன்கு அறிந்ததும் அவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வர்த்தகப் பெயர்களில் ஒன்று ‘ஜயன்ட்’. சிங்கப்பூரில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து வளர்ச்சி அடைவதற்குத் தேவையான நீண்ட காலத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டுள்ளோம்,” என்று சிங்கப்பூரில் உள்ள டிஎஃப்ஐ சில்லறை வர்த்தகக் குழுமத்தின் (DFI Retail Group) உணவுப் பொருள்களுக்கான நிர்வாக இயக்குநர் திரு இயோப் மென் கூறினார்.
ஜயன்ட் உட்பட கோல்ட் ஸ்டோரேஜ், சிஎஸ் ஃபிரெஷ், ஜேசன்ஸ் டெலி ஆகிய பேரங்காடிகளை டிஎஃப்ஐ சில்லறை வர்த்தக குழுமம் நடத்துகிறது. இந்த பேரங்காடிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தயாரிப்புகளை முன்னெடுத்து விற்பனை செய்வதாகவும் இவை அனைத்தும் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் வெவ்வேறு வகையில் உதவிபுரிவதாகவும் திரு இயோப் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் ஒட்டுமொத்த சிங்கப்பூர் சந்தையையும் கைப்பற்ற விரும்புகிறோம். அனைத்து சிங்கப்பூரர்களிடமும் வர்த்தக ரீதியில் சென்றடைய ஒரே வர்த்தகப் பெயர் போதாது. வெவ்வேறு நோக்கங்களுக்காக நாம் வெவ்வேறு வர்த்தகப் பெயர்களை வைத்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.
“பீஷானில், ஜயன்ட் பேரங்காடி செயல்பட்டுவந்த இடத்தின் வாடகை அதிகரித்த போதிலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தன. பல ஆண்டுகளாக நாங்கள் பார்த்தது என்னவென்றால், கழிவு விலையில் விளம்பரப்படுத்தப்படும் பொருள்களுக்காக மட்டுமே வாடிக்கையாளர்கள் அங்கு வருகின்றனர்” என்று திரு இயோப் தெரிவித்தார்.
மேலும், “தொடர்ச்சியான விளம்பரங்கள் இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமுமில்லை. அதே நேரத்தில் செலவினங்கள் அதிகரித்தன. இதனால், அவ்வட்டாரத்தில் வர்த்தகத்தை நீடிக்க முடியாமல் போனது,” என பீஷானில் இருந்த ஜயன்ட் பேரங்காடியை மூடியதற்கான காரணத்தை அவர் விவரித்தார்.