தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீன மின்வாகன நிறுவனத்தின்மீது ஜிஐசி வழக்குத் தொடுப்பு

2 mins read
3b9ef39c-2e49-4296-a569-29cc5f8d181e
‘நியோ பேட்டரி அசெட்’ நிறுவனத்துடனான உறவுகள் குறித்து தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை நியோ நிறுவனம் வெளியிட்டதாக ஜிஐசி குற்றஞ்சாட்டியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கும் சீன நிறுவனமான நியோமீதும் அதன் நிர்வாகிகள் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசி வழக்கு தொடுத்துள்ளது.

வருமானத்தை உயர்த்திக் காட்டியதன்மூலம் கடனீட்டுப் பத்திர விதிகளை மீறிவிட்டதாக ஜிஐசி குற்றம் சுமத்தியுள்ளது.

நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவ்வழக்கு தொடுக்கப்பட்டது என்றும் நியோ நிறுவனம், அதன் தலைமை நிர்வாக அதிகாரி லி பின், முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஃபெங் நெய் ஆகியோர் எதிர்வாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மொழியில் ‘வெய்னெங்’ என அழைக்கப்படும் ‘நியோ பேட்டரி அசெட்’ எனும் துணை நிறுவனத்துடனான உறவுகள் குறித்து அவர்கள் தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை வெளியிட்டனர் என்பதும் தமது தொழில், நிதி நிலைமை குறித்த முக்கிய உண்மைகளை வெளியிடத் தவறிவிட்டனர் என்பதும் ஜிஐசியின் குற்றச்சாட்டுகள்.

இதன் தொடர்பில் கருத்தறிய நியோ நிறுவனத்தைத் தொடர்புகொண்டதாகவும் ஜிஐசி கருத்துரைக்க மறுத்துவிட்டதாகவும் புளூம்பெர்க் செய்தி தெரிவித்தது.

கடந்த 2017 மார்ச்சில் ‘நியோ சீரிஸ் சி’ நிதிதிரட்டு நடவடிக்கையின்போது, ஜிஐசி அதில் முதலீடு செய்தது.

இதனிடையே, வியாழக்கிழமை (அக்டோபர் 16) சிங்கப்பூர் பங்குச்சந்தையில் நியோ நிறுவனத்தின் பங்குவிலை 13.8 விழுக்காடு சரிந்து, 6.00 அமெரிக்க டாலராகக் குறைந்தது. பின்னர் பிற்பகல் 2.48 மணிக்கு அதன் மதிப்பு 8.1% கூடி, 6.40 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

நியூயார்க், ஹாங்காங் பங்குச் சந்தைகளிலும் நியோ நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நியோ, ஒருகாலத்தில் மின்வாகனத் தொழில்துறையில் வளர்ந்துவரும் நிறுவனமாக, ‘டெஸ்லா’விற்குச் சவாலாக உருவெடுக்கும் நிறுவனமாகப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்