செங்காங் வட்டாரத்தில் இருக்கும் கூட்டுரிமை குடியிருப்பில் வேன் மோதி மாண்ட ஏழு வயது சிறுமியின் வழக்கை மரண விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 20ஆம் தேதி (வியாழக்கிழமை) விசாரிக்கத் தொடங்கியது.
சிறுமிமீது மோதுவதற்குமுன் வேன் ஓட்டுநர் அச்சிறுமியைப் பார்க்கத் தவறியதற்கான காரணம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஃபெர்ன்வேலில் இருக்கும் ‘தோபியரி’ கூட்டுரிமைக் குடியிருப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இவ்விபத்து நடந்தது.
அந்த விபத்தில் தொடக்கநிலை 2ஆம் வகுப்பு பயின்ற நிவ்யா ரமேஷ்வர் பலத்த காயமடைந்தார். அவரைச் செங்காங் பொது மருத்துவமனைக்குச் சுயநினைவின்றிக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார்.
பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கிய மாண்ட சிங்கப்பூர் சிறுமியின் வழக்கு விசாரணைக்கு அவருடைய பெற்றோர் தங்கள் குடும்ப வழக்கறிஞர்களுடன் வந்திருந்தனர்.
விபத்து நடந்த தினத்தன்று காலை 6.20 மணியளவில் என்ன நடந்தது என்பதைப் போக்குவரத்து காவல்துறை விசாரணை அதிகாரி ஜெஃப் டான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கமாக நிவ்யாவை காலை 6.10 மணி முதல் 6.20 மணிக்குள் பள்ளிப் பேருந்துக்காக காத்திருக்க அவர்களின் கூட்டுரிமைக் குடியிருப்பு புளோக்கில் உள்ள கார் நிறுத்துமிட இணைப்புச் சாலைக்கு அழைத்துச்செல்வேன் என நிவ்யாவின் குடும்பப் பணிப்பெண் திருவாட்டி சிவக்குமார் இளவரசி கூறினார்.
பள்ளி வாகனத்தில் நிவ்யா ஏறுவதற்கு வசதியாக அச்சாலையக் கடந்து இருவரும் செல்வர்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்தன்று நிவ்யாவை புளோக்கின் வாசலில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, சாலையின் எதிர்திசையில் இருக்கும் இடத்தில் நிவ்யாவின் பள்ளிப் பையை வைப்பதற்காகத் திருவாட்டி சிவக்குமார் சென்றார்.
நிவ்யாவைப் பார்த்தவாறே அவர் சாலையைக் கடந்தார். பையை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது நிவ்யாவைக் காணவில்லை.
அச்சமயத்தில் வேன் ஓட்டுநர் புவா ஹக் ஹியோங், மற்றொரு புளோக்கில் பள்ளி மாணவர் ஒருவரை ஏற்றிக்கொண்டு மற்ற மாணவர்களை அழைத்து வருவதற்காகச் சென்று கொண்டிருந்தார்.
இணைப்புச்சாலையில் வேனை ஓட்டிக்கொண்டு வந்த புவா, திருவாட்டி சிவக்குமார் சாலையைக் கடப்பதற்காக வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார்.
தான் நிவ்யாவைப் பார்க்கவில்லை என்றும் வேனின் முன்பகுதியில் தான் யாரையோ மோதியது போன்ற தாக்கத்தை உணர்ந்தேன் என்றும் அதிகாரி ஜெஃப் டானிடம் புவா கூறினார்.
வேன் மோதியதால் பலத்த காயமடைந்த நிவ்யாவுக்கு உதவி கோரி திருவாட்டி சிவக்குமார் கூச்சலிட்டார். அவருடைய சத்தத்தைக் கேட்டு நிவ்யாவின் தந்தையும் தாயும் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர்.
நெஞ்சிலும் வயிற்றுப் பகுதியிலும் பலத்த காயமடைந்த நிவ்யா மருத்துவமனையில் மாண்டார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக புவா கைதுசெய்யப்பட்டார்.
வேனின் கண்காணிப்புக் கருவி பழுதானதால் விபத்தை அதனால் காட்சிப்படுத்த முடியவில்லை என அதிகாரி நீதிமன்றத்தில் சொன்னார்.
மேலும், கூட்டுரிமை குடியிருப்பு புளோக்கின் முதல் தளத்தில் இருக்கும் கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளில் பெண் ஒருவர் சாலையைக் கடப்பதாகவும் அவரைத் தொடர்ந்து ஒரு சிறிய உருவம் சாலையைக் கடப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தன.
அந்தச் சிறிய உருவம் நிவ்யாதான் என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றும் நிபுணர்களின் உதவி தேவைப்படுகிறது என்றும் திரு டான் கூறினார்.
வேனை ஓட்டுநர் ஓட்டிய வேகம் குறித்து கூர்ந்து ஆராய விபத்து தொடர்பான பதிவைச் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் அளிக்கும்படி திரு டானுக்கு மரண விசாரணை அதிகாரி ஆடம் நகோடா உத்தரவிட்டார்.
நிவ்யாவின் புளோக்கிற்கு வெளியே ஒரு சுவரும் சில புதர்களும் இருந்ததாகவும் அதனால் ஓட்டுநர் புவாவால் பாதசாரியைப் பார்க்க முடியாமல் இருந்திருக்கலாம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதனால், அந்த சுவர் மற்றும் புதர்களின் உயரத்தை அளவிட்டு அவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என விசாரணை அதிகாரியைத் திரு நகோடா கேட்டுக்கொண்டார்.