செங்காங் வட்டாரத்தில் அமைந்துள்ள ‘ரிவர்வேல் மால்’ கடைத்தொகுதி மின்படிக்கட்டில் ஒரு சிறுமியின் வலது கால் சிக்கிக்கொண்டது.
மின்படிகளில் அடிக்கடி சிக்கக்கூடியதாகக் கூறப்படும் ‘கரோக்ஸ்’ ரப்பர் காலணிகளைச் சிறுமி அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தைக் காட்டும் படம் ஒன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை ‘சியாவ்ஹோங்ஷூ’ சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
குறைந்தது ஒன்பது மீட்புப் படை அதிகாரிகள் மின்படியில் கூடி ஒருவருக்கு உதவுவதாக அதில் தெரிகிறது.
மற்றொரு படத்தில் மின்படியில் சிக்கியிருந்தபடி இளஞ்சிவப்பு காலணி ஒன்று தெரிந்தது.
இரண்டாவது மாடியிலிருந்து முதல் மாடிக்குச் செல்லும் மின்படியில் சிறுமியின் கால் சிக்கிக்கொண்டதாக ‘எயிட்வொர்ல்டு நியூஸ்’ செய்தி ஊடகம் தெரிவித்தது.
இதற்கிடையே, சிறுமி சத்தம் ஏதும் போடவில்லை என்று சம்பவ இடத்தில் இருந்த திருவாட்டி ஃபெங் என்பவர் கூறியிருந்தார்.
சிறுமி கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.