புவன விஸ்தா வட்டாரத்தில் உள்ள த ஸ்டார் விஸ்தா கடைத்தொகுதியில் கண்ணாடித் தகடு ஒன்று மேலிருந்து விழுந்ததில் நால்வர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) காலை அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
காயமடைந்தனரா என்பதைக் கண்டறிய ஆறு பேர் சோதிக்கப்பட்டதில் அவர்களில் நால்வர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மற்ற இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அந்தப் படை, சம்பவம் நிகழ்ந்தது குறித்து முற்பகல் 11.30 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது.
அந்தக் கடைத்தொகுதிக்குச் சென்றவர்களில் சிலர் சம்பவம் தொடர்பான புகைப்படங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பகிர்ந்துகொண்டனர்.
அந்தப் படங்களைப் பார்த்தபோது, கடைத்தொகுதியின் மூன்றாவது தளத்தில் இருந்து கண்ணாடித் தகடு விழுந்ததைப் போலத் தெரிந்தது.
முதலாவது தளத்தில் இரண்டு உணவகங்களுக்கு அருகில் அந்தக் கண்ணாடித் தகடு விழுந்தது.
சம்பவத்தின்போது கடைத்தொகுதியில் இருந்து பீட்டர் ஹாஸ்கின்ஸ் என்பவர், தாம் இரண்டாவது தளத்தில் இருந்தபோது ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டதாகவும் பின்னர் கண்ணாடி உடைந்து சிதறியதைத் தரையில் கண்டதாகவும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி ஹெங் என்னும் வாடிக்கையாளர் கூறுகையில், தாம் தமது நண்பருடன் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது ஏதோ ஒன்று உடையும் சத்தம் பலமாகக் கேட்டதாகத் தெரிவித்தார்.
புவன விஸ்தா எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள அந்த கடைத்தொகுதி நியூ கிரியேஷன் தேவாலயத்துக்குச் சொந்தமானது.