கிராப் செயலியில் வாடகை வாகனச் சேவைக்கான பயணக் கட்டணம் 1,000 வெள்ளி; இது அச்செயலியின் சில பயனர்களுக்கு ஏற்பட்ட அனுபவம்.
கோளாறு காரணமாக கிராப் செயலியின் பயனர்கள் சிலர் அதிர்ச்சியடைந்தனர். புதன்கிழமை (ஆகஸ்ட் 20) நண்பகல் முதல் சுமார் 20 நிமிடங்களுக்கு கிராபில் பயணக் கட்டணம் இவ்வளவு அதிகமாக இருந்தது.
பதிவுகளை திரையில் வெளிப்படுத்தும் அம்சத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டணம் இவ்வளவு அதிகமாக இருந்ததென கிராப் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
“தற்காலிகமாக எழுந்த கோளாறு காரணமாக வழக்கத்துக்கு மாறாக அதிகக் கட்டணம் நமது செயலியில் வெளியிடப்பட்டது,” என்று கிராப் அறிக்கையில் தெரிவித்தது.
“பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. செயலி இப்போது வழக்கம்போல் செயல்படுகிறது. ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்,” என்றும் கிராப் குறிப்பிட்டது. அண்டை நாடான மலேசியாவிலும் கிராப் பயனர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பயணக் கட்டணம் வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமாக காண்பிக்கப்பட்டதைப் பயனர்கள் பலர் படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
அமெரிக்காவில் இயங்கும் ஊபர் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் கிராப் செயலி, சிங்கப்பூர் உட்பட இவ்வட்டார நாடுகளில் பிரபலமாக இருந்துவருகிறது.

