சிங்கப்பூர், தாய்லாந்துக் காவல்துறைகள் கூட்டு நடவடிக்கை

தாய்லாந்தில் உலகளாவிய ஊடுருவி கைது

2 mins read
82f86679-e058-4dec-84ac-d19e61611431
கேட்ட பணத்தைத் தர பாதிக்கப்பட்டவர்கள் தவறினால், அவர்களது தரவு இணையத்தில் விற்பனைக்கு விடப்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகெங்கிலும் குறைந்தது 75 ஊடுருவல் சம்பவங்களுக்குக் காரணம் என நம்பப்படும் 39 வயது ஆடவர் ஒருவர், புதன்கிழமை (பிப்ரவரி 26) தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் காவல்துறையும் அரச தாய்லாந்து காவல்துறையும் சேர்ந்து நடத்திய எல்லைத் தாண்டிய நடவடிக்கையில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை வியாழக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட 11 பேர் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தரவு அத்துமீறல் குறித்து 2020ல் விசாரணை தொடங்கியது. தங்கள் தரவு களவாடப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் அந்த ஊடுருவி பணம் கேட்டு மிரட்டியிருந்தார்.

கேட்ட பணத்தைத் தர பாதிக்கப்பட்டவர்கள் தவறினால், அவர்களது தரவு இணையத்தில் விற்பனைக்கு விடப்படும்.

‘கிளவ்ட்சேக்’ எனும் மின்னிலக்க இடர் கண்காணிப்புத் தளத்தைப் பொறுத்தமட்டில், பல்வேறு பெயர்களில் செயல்பட்ட அந்த ஊடுருவி, பெரும்பாலும் ஆசியாவில் அதிக வருவாய் ஈட்டும் பெருநிறுவனங்களைக் குறிவைத்தார்.

சிங்கப்பூர் காவல்துறையின் இணையக் குற்றவியல் தளபத்தியத்தைச் சேர்ந்த அதிகாரிகள், தாய்லாந்துக் காவல்துறையுடன் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றி, தங்கள் விசாரணை முடிவுகளைப் பகிர்ந்ததாக அறிக்கை கூறியது.

இருநாட்டுக் காவல்துறைகளின் கூட்டு முயற்சியால் அந்தச் சந்தேக நபரின் அடையாளத்தை உறுதிசெய்ய முடிந்தது. தாய்லாந்திலும் பல்வேறு தரவு அத்துமீறல்களுக்கு அந்த ஆடவர் காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது. அவர் எந்த நாட்டவர் என்பது குறித்து அறிக்கை குறிப்பிடவில்லை.

மடிக்கணினிகள், கைப்பேசிகள், சொகுசு வாகனங்கள், விலையுயர்ந்த கைப்பைகள் உட்பட 10 மில்லியன் தாய்லாந்து பாட்டுக்கு (S$395,500) மேல் மதிப்புடைய சொத்துகளை தாய்லாந்துக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

தாய்லாந்துக் காவல்துறைக்கு நன்றி தெரிவித்த காவல்துறை உதவி ஆணையர் பால் டே, வட்டாரக் காவல்துறைகளுடன் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றுவதில் சிங்கப்பூர் காவல்துறையின் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்