டிக்டாக் உலகளாவிய மறுசீரமைப்பு: சிங்கப்பூரில் மீண்டும் 20 பேர் ஆட்குறைப்பு

டிக்டாக் உலகளாவிய மறுசீரமைப்பு: சிங்கப்பூரில் மீண்டும் 20 பேர் ஆட்குறைப்பு

2 mins read
பிப்ரவரி மாதமும் பன்னிரண்டு பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்
76b6d2c7-2af6-4909-812a-552deaa144b5
வாடிக்கையாளர் பாதுகாப்புப் பிரிவின் ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகியுள்ளனர். - படம்: ஏஷியா ஒன்

உலகளாவிய மறுசீரமைப்பின் அங்கமாக, சிங்கப்பூரில் உள்ள டிக்டாக் நிறுவனத்தின் ஊழியர்கள் ஏறத்தாழ 20 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

பயனாளர்கள் நம்பிக்கை, பாதுகாப்புப் பிரிவின் ஊழியர்கள் அவர்கள் என்று பெயர் வெளியிட விரும்பாத டிக்டாக் ஊழியர் ஒருவர் ஏஷியா ஒன் ஊடகத்திடம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) தெரிவித்தார்.

அவர் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டவர் அல்லர் என்று தெரிகிறது. புதன்கிழமை ஆட்குறைப்பு குறித்த மின்னஞ்சலை அவர் பெற்றதாகக் கூறினார்.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட பிரிவினர், டிக்டாக்கில் வெளியிடப்படும் காணொளிகள் முறையானதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதை உறுதி செய்யும் பணியைச் செய்தனர். புதிய சவால்களுக்கு ஏற்ப டிக்டாக் தளம் செயலாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அப்பிரிவுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட கடிதத்தில் டிக்டாக் நிறுவனத்தின் உலகளாவிய நம்பிக்கை, பாதுகாப்புப் பிரிவுக்கான தலைவர் சன்தீப் குரோவர் தெரிவித்தார்.

துடிப்புடன் கவனமாக டிக்டாக்கின் இலக்குகளை அடையத் தயார்நிலையில் இருக்க, நிர்வாக அடிப்படையில் மாற்றங்கள் செய்யவேண்டியதன் அவசியத்தை முன்மொழிந்துள்ளதாக அப்பிரிவுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் விளக்கியிருந்தார்.

பாதிக்கப்படாத ஊழியர்களுக்கு ஒரு பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இணையத்தில் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் ஆட்குறைப்புக்கான முடிவு எளிதில் எட்டப்படவில்லை என்று திரு குரோவர் குறிப்பிட்டார்.

பயனாளர் நம்பிக்கை, பாதுகாப்புப் பிரிவை வலுப்படுத்தும் முன்னெடுப்புகள் உலக அளவில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக டிக்டாக் பேச்சாளர் தெரிவித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு காணொளித் தளத்தில் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிடுகிறோம்,” என்று அவர் கூறினார்.

முக்கியச் செயல்பாடுகள் நடக்கும் மையங்களில் பணியாற்றும் பிரிவுகள் இலக்குகளை எட்டிட அனைத்து வகையிலும் வளைந்துகொடுத்து பணியாற்றும் திறனுடன் இருப்பதை உறுதிசெய்வதும் அதில் அடங்கும் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் உள்ள பைட்டான்ஸ் ஊழியர்களும் அங்குள்ளோர் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக இணையத்தில் பதிவிட்டுள்ளனர். பைட்டான்ஸ் என்பது டிக்டிக் செயலியை வடிவமைத்த நிறுவனமாகும்.

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் உள்ள டிக்டாக் நிறுவனம் அங்குள்ள ஊழியர்கள் 300 பேர் வரை ஆட்குறைப்பு செய்ய வாய்ப்புள்ளதாக ஊடகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம், மறுசீரமைப்பு என்ற பெயரில் சிங்கப்பூரில் இயங்கும் அதே நம்பிக்கை, பாதுகாப்புப் பிரிவில் ஏறத்தாழ பன்னிரண்டு ஊழியர்களை டிக்டாக் ஆட்குறைப்பு செய்தது.

குறிப்புச் சொற்கள்
ஆட்குறைப்புடிக்டாக்செயலிஉலகம்நடவடிக்கைஊழியர்