அறுவைச் சிகிச்சை நிபுணர் பணிக்குத் திரும்பும் கோ போ கூன்

அறுவைச் சிகிச்சை நிபுணர் பணிக்குத் திரும்பும் கோ போ கூன்

2 mins read
4e13676c-9d85-408d-8a13-d59baf607ee8
முன்னாள் சுகாதார, மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன், குடும்பக் காரணங்களுக்காக பதவி விலகுவதாகத் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் சுகாதார, மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன், சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு திரும்பவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அறுவைச் சிகிச்சை நிபுணர் பணிக்கு மீண்டும் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

அரசியலிலிருந்து விலகிக்கொண்ட அவர், சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அதுகுறித்து பதிவிட்டார்.

சுகாதார அமைச்சில் அளிக்கப்பட்ட பிரியாவிடை விருந்தின்போது தம்முடன் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு 54 வயது திரு கோ நன்றி கூறினார்.

பெருங்குடல் அறுவைச் சிகிச்சை நிபுணரான அவர், தற்போதைக்குத் தமது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டார்.

குடும்பக் காரணங்களுக்காகத் துணையமைச்சர் பதவியிலிருந்து இம்மாதம் 1ஆம் தேதி விலகுவதாகக் கூறிய திரு கோவின் முடிவைப் பிரதமர் அலுவலகம் மே 22ஆம் தேதி அறிவித்தது.

2015ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து கணவராக, தந்தையாக, மகனாகச் சரிவரி செயல்பட முடியவில்லை என்று ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு மகள்களுக்குத் தந்தையான திரு கோ, தெம்பனிஸ் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து நீடிப்பார்.

அரசியலில் கால் பதிப்பதற்குமுன், சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் பெருங்குடல் புற்றுநோய் மரபணு மருத்துவச் சேவையின் நிறுவன இயக்குநராகத் திரு கோ பொறுப்பு வகித்தார்.

2011ஆம் ஆண்டு மவுண்ட் எலிசபெத் மருத்துவ நிலையத்தில் உள்ள கேப்ஸ்டோன் பெருங்குடல் அறுவைச் சிகிச்சை நிலையத்தில் தனியார் பயிற்சியை அவர் மேற்கொண்டார். அதற்கு மறுஆண்டு சிங்கப்பூர் ஃபோர்ட்டிஸ் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பெருங்குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனையையும் திரு கோ நிறுவினார்.

2013ஆம் ஆண்டு பொங்கோல் ஈஸ்ட் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அவர், பாட்டாளிக் கட்சியின் லீ லி லியெனிடம் தோற்றார். 2015ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அணியில் அங்கம் வகித்த திரு கோ, 2016ஆம் ஆண்டு அரசியல் பணியைத் தொடங்கினார்.

2020, 2025 பொதுத் தேர்தல்களில் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் அவர் போட்டியிட்டார்.

குறிப்புச் சொற்கள்