கரிம வெளியேற்றம் அறவே அற்ற நிலையை எட்டும் இலக்கை இனி தவிர்க்கவே முடியாது என்று மனிதவள அமைச்சரும், எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் பூசல்களால் நிலையற்றுப்போன படிம எரிபொருள்களின் விலை, எரிசக்தி விலையை உயர்த்தியுள்ளது.
கடல்மட்ட உயர்வு போன்ற பருவநிலை மாற்றங்களின் தாக்கத்தையும் சிங்கப்பூர் சமாளிக்கவேண்டிய நிலையில் உள்ளது என்றார் அவர்.
“எரிசக்தி நமக்கு அத்தியாவசியம்,” என்ற டாக்டர் டான், சிங்கப்பூர் அதன் எரிசக்தித் துறை உருமாற்றத்திற்கான அனைத்து வழிகளையும் ஆராய்வதாகக் கூறினார்.
நீடித்த நிலைத்தன்மைமிக்க, மீள்திறனுடன் கூடிய, செலவு குறைந்த வகையில் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்ய சிங்கப்பூர் முயல்வதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூர் தற்போது அதன் எரிசக்தித் தேவையில் 95 விழுக்காட்டிற்கு இயற்கை எரிவாயு, படிம எரிபொருள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கிறது.
2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்ட அது இலக்கு கொண்டுள்ளது.
அந்நிலையை எட்ட, நாட்டின் 40 விழுக்காட்டுக் கரிம வெளியேற்றத்துக்குப் பொறுப்பு வகிக்கும் எரிசக்தித் துறை அதன் கரிம வெளியேற்ற அளவைக் குறைக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் எரிசக்தி உருமாற்றத்துக்குக் கூடுதல் செலவு செய்யவேண்டியிருக்கும் என்று கூறிய டாக்டர் டான், அதைச் சமாளிக்க அரசாங்கம் மக்களுக்கு உதவும் என்றார்.
யூ-சேவ் கழிவுகள், பருவநிலைப் பற்றுச்சீட்டுகள் போன்ற சில திட்டங்களை டாக்டர் டான் குறிப்பிட்டார்.
“செலவு அதிகரிப்பதைத் தடுப்பது சாத்தியமன்று,” என்ற டாக்டர் டான், அதன் தாக்கத்தைக் குறைக்க கழிவுகள், மானியங்கள் ஆகியவை வழங்கப்படும் என்றார்.
இயற்கை எரிசக்தியின் இறக்குமதிதான் சிங்கப்பூருக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று டாக்டர் டான் கூறினார்.
சிங்கப்பூரில் இயற்கை எரிசக்தி வளங்கள் குறைவாக இருப்பதால் வேறு இடத்தில் இயற்கையாக உற்பத்தியாகும் இயற்கை மின்சாரத்தை இறக்குமதி செய்வது கைகொடுக்கும் என்றார் அவர்.
2035ஆம் ஆண்டுக்குள் குறைவான கரிம வெளியேற்றத்தைக் கொண்ட எரிசக்தி இறக்குமதியை 4 கிகாவாட்டிலிருந்து 6 கிகாவாட்டுக்கு உயர்த்துவதாகச் சிங்கப்பூர் கடந்த ஆண்டு அறிவித்தது. இருப்பினும் பங்காளித்துவ உடன்பாடுகளின் அடிப்படையில் அது மேலும் உயர்த்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கலாம் என்றார் டாக்டர் டான்.