சிங்கப்பூரில் மாரடைப்புச் சம்பவங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு வீடுகளிலோ பொது இடங்களிலோதான் நிகழ்கின்றன என்று சிங்கப்பூர் இதய அறநிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு வெளியே நிகழும் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அறநிறுவனத்தின் அண்மைய தரவுகளின்படி, 2022ல் இது முன்னெப்போதும் இல்லாத அளவாக 4,058ஐ எட்டியது. இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட 12 விழுக்காடு அதிகம்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் முறையான பயிற்சிபெற்ற 1 மில்லியன் சமூக முதலுதவியாளர்களைத் தயார்ப்படுத்துவதை அறநிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
தற்போது, தீ விபத்து, மருத்துவ அவசரநிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ‘மைரெஸ்பாண்டர்’ செயலியில், பயிற்சிபெற்ற 270,000 சமூக முதலுதவியாளர்கள் ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர்.
தனது புதிய இலக்கை அடைவதற்காக, உயர் கல்விக் கழகங்களைச் சேர்ந்த 170,000 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க அறநிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மேலும் 300,000 பதின்ம வயதினருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளிக்க பயிற்சி வழங்குவதற்காகக் கல்வி அமைச்சுடன் இணைந்து அறநிறுவனம் பணியாற்றி வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 4,500 பேருக்கு அறநிறுவனம் பயிற்சி அளித்துள்ளது. இந்த எண்ணிக்கையை ஆண்டிறுதிக்குள் 10,000ஆக, அதாவது இருமடங்குக்கும் மேலாக உயர்த்த அது நோக்கம் கொண்டுள்ளது. வரும் அக்டோபரில், ஒரே நாளில் 1,000 பேருக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன், ‘புரோஜெக்ட் ஹார்ட்’ என்ற பெயரில் இலவசப் பொது சிபிஆர் பயிற்சி நிகழ்ச்சி ஒன்றையும் அது நடத்தவுள்ளது.
இந்த அமைப்பு, பொதுமக்களுக்கான பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்த திறன் பயிற்சி வழங்குநர்களுடனும் பணியிடங்களில் அதிக ஊழியர்களுக்குத் தேவையான திறன்களை வழங்குவதற்காக பெருநிறுவனங்களுடனும் கூட்டு சேரத் திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக, சிபிஆர் எனும் இதய இயக்க மீட்பு சிகிச்சை மற்றும் தானியங்கி வெளிப்புற சுவாச மீட்பு சிகிச்சை திறன்களில் ஏற்கெனவே சான்றிதழ் பெற்ற உதவி மருத்துவ ஊழியர் மற்றும் தாதிமை மாணவர்கள் உட்பட, சுகாதாரத் துறை வல்லுநர்களாக ஆக விரும்புவோருக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம், தனது பயிற்றுவிப்பாளர் குழுவையும் அது விரிவுபடுத்தி வருகிறது.

