தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் முதலீட்டாளர்களைக் கவ்வும் தங்க மோகம்

1 mins read
e9c9adb5-6ea9-4030-93d3-0a0a30084552
தங்கக் கட்டிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து உலகை மெய்மறக்கச் செய்திருக்கும் தங்க மோகம் சிங்கப்பூர் முதலீட்டாளர்களையும் விட்டு வைக்கவில்லை.

நாடுகளுக்கிடையிலான அரசியல் சூழலில் நிலவும் பதற்றம், அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களினால் பாதுகாப்பான முதலீடாக அமையக்கூடிய உலோகத்தை மக்கள் நாடுவது தங்க மோகத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (அக்டோபர் 13) தங்க விலை மறுபடியும் இதுவரை காணாத உச்சத்தைத் தொட்டது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் பூசல் தலைதூக்கியிருப்பது தங்கத்துக்கான தேவையை அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது 100 விழுக்காடு வரி விதித்தார். மேலும், முக்கியமான மென்பொருள்களை ஏற்றுமதி செய்யக் கட்டுப்பாடுகளை விதித்தார். அக்கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடப்புக்கு வரும்.

திங்கட்கிழமை காலை 10.53 மணி நிலவரப்படி தங்க விலை 0.7 விழுக்காடு கூடி ஓர் அவுன்சுக்கு 4,044.29 டாலராகப் (5,250.90 வெள்ளி) பதிவானது.

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள், இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டு அடிப்படையில் மாதந்தோறும் தங்கச் சேமிப்புக் கணக்கின் மூலம் சராசரியாக 65 விழுக்காடு அளவு அதிக தங்கம் வாங்கியதாக யுஓபி வங்கி தெரிவித்தது.

வரும் மாதங்களில் தங்க விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் யுஓபி குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்