வெளிநாட்டு அமைப்புகளுக்கு சிங்கப்பூரில் தங்கச் சேமிப்பு வசதி

நாணய ஆணையத்தின் தேசிய நாணயப் பெட்டகச் சேவை விரிவாக்கம்

வெளிநாட்டு அமைப்புகளுக்கு சிங்கப்பூரில் தங்கச் சேமிப்பு வசதி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Nov 2026 - 1:08 pm

2 mins read

வெளிநாட்டு மத்திய வங்கிகளும் அரசாங்க அமைப்புகளும் தங்களின் தங்கக் கையிருப்பைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகத் தங்கப் பாதுகாப்புப் பெட்டகச் சேவையை நாணய ஆணையம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டின் தங்கத்தைச் சேமிக்க வசதியாக, தற்போது 500 டன் வரை சேமிக்கும் திறன் கொண்ட நாணய ஆணையத்தின் தேசிய நாணயப் பெட்டகம், தேவைக்கு ஏற்ப விரிவாக்கப்படும்.

சிங்கப்பூரிடம் தற்போது 2,000 டன்னுக்கும் மேலான சேமிப்புக் கொள்ளளவு உள்ளது. புல்லியன் எனப்படும் மதிப்புமிக்க உலோகத் தகடுகள், கட்டிகளுக்கான வங்கிகள், நிறுவன முதலீட்டாளர்கள், பெரும் செல்வந்தர்கள் உள்ளிட்ட தரப்பினர் அந்த சேமிப்புக் கொள்ளளவைப் பயன்படுத்துகின்றனர். இதற்குப் புதிய சேவை மேலும் வலுச் சேர்க்கும்.

தங்க வணிகம், சேமிப்பு ஆகியவற்றுக்கான நிலையமாக விளங்கிவரும் சிங்கப்பூரின் நிலை வலுவடைந்துவரும் வேளையில் இச்சேவை அறிமுகம் காண்கிறது.

உலகச் சூழலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் முதலீட்டாளர்களும் மத்திய வங்கிகளும் தங்கத்தை நாடுவதாகச் சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமரும் அதன் தலைவருமான திரு கான் கிம் யோங் கூறினார்.

ஜூன் மாதத்தில் இச்சேவையை முதலில் அறிவித்த அவர், சில வெளிநாட்டு மத்திய வங்கிகள் விருப்பம் தெரிவித்திருப்பதாகச் சொன்னார். பேச்சுவார்த்தையின் விவரங்களைத் தெரிவிக்க முடியாத காரணத்தால் அவற்றின் பெயர்களை வெளியிடவில்லை என்று திரு கான் குறிப்பிட்டார்.

“தங்கச் சந்தையில் கவனம் செலுத்தும் ஹாங்காங்குடன் ஒப்பிடுகையில், இது ‘வெற்றி - தோல்வி விளையாட்டு’ அன்று. தங்க இருப்பைச் சேமிக்க மாற்று இடங்களைத் தேடும் மத்திய வங்கிகளுக்குக் கூடுதல் வாய்ப்பை வழங்குவதே சிங்கப்பூரின் நோக்கம். நிதி நடுவமான சிங்கப்பூரின் நம்பகத்தன்மை இதற்கு உதவும்,” என்றார் திரு கான்.

ஆசிய வர்த்தகச் சந்தை நேரத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தங்க வணிக வங்கிகளுக்குத் தங்கப் பாதுகாப்புக் கணக்குகள் (gold custody accounts) வழங்கப்படும்.

சிங்கப்பூர் பங்குச் சந்தையின் நேரடி வணிக முறைக் கட்டமைப்புச் சோதனைகள் முடிவடைந்து, விதிமுறைகள் விரைவில் இறுதி செய்யப்படும். இதில் டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி, டாய்ச் வங்கி, ஐசிபிசி ஸ்டாண்டர்ட் வங்கி, ஜேபிமார்கன் ஆகிய ஆறு வங்கிகள் சரிபார்க்கும் உறுப்பினர்களாகப் பங்கேற்கின்றன. 2026 இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு 2027 முதல் காலாண்டில் நேரடி வர்த்தகம் தொடங்கும்.

2027ல் மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறை

உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு அல்லாத மொத்த விற்பனை முதலீட்டுத் தங்கச் சந்தையை ஊக்குவிக்க மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி கட்டமைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிறுவனங்களுக்கு இடையேயான தூய்மையாக்கல், மறுவடிவமைப்பு, மதிப்பீடு, தரகு போன்ற தெரிவுசெய்யப்பட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்கப்படும். இத்திட்டம் 2027 ஏப்ரல் முதல் நடப்புக்கு வரும். கூடுதல் விவரங்கள் 2027 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்