தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதிப்பெண்களுடன் நற்குணமும் முக்கியம்: கல்வியமைச்சர் டெஸ்மண்ட் லீ

2 mins read
30070ee0-7ff9-44ea-bb25-2bd7e1849868
இன நல்லிணக்க நாளை முன்னிட்டு மேஃபிளவர் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார் கல்வியமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிக்கூடங்களில் சிறந்து விளங்குவது முக்கியம். அதேபோல நற்பண்பு, குடியியல் கல்வி மூலமும் அன்றாட வாழ்க்கை மூலமும் கற்கும் படிப்பினைகளும் முக்கியம் என்றார் கல்வியமைச்சர் டெஸ்மண்ட் லீ.

உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) பேசிய அமைச்சர் அவ்வாறு கூறினார்.

“அனுதாபத்துடன் இருப்பது, சரியான நேரத்தில் எதைச் சொல்வது என்று தெரிந்துவைத்திருப்பது, குழுவை ஒன்றிணைப்பது, இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ள அறிந்துவைத்திருப்பது ஆகியவை வாழ்க்கையில் சிறந்து விளங்குகிறோம் என்று அர்த்தமாகும்,” என்றார் திரு லீ.

அங் மோ கியோவில் உள்ள மேஃபிளவர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நற்பண்பு, குடியியல் கல்வி வகுப்பை அவர் கவனித்தார். ஜூலை 21ஆம் தேதின்று அனுசரிக்கப்படும் இன நல்லிணக்க நாளை முன்னிட்டு திரு லீயும் கல்விக்கான மூத்த துணையமைச்சர் டேவிட் நியோவும் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றனர்.

வகுப்பின்போது திரு லீயும் திரு நியோவும் ஐந்திலிருந்து ஆறு மாணவர்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து கலாசாரங்களுக்கு இடையிலான இணக்கம், இனங்களுக்கு இடையிலான உறவு ஆகியவைப் பற்றி கலந்துரையாடினர்.

மாணவர்களிடம் பேசிய திரு லீ, கல்விச் சாதனைகளுக்கும் தனிநபர் வளர்ச்சிக்கும் இடையே சமநிலை காண்பதுதான் சிங்கப்பூர்க் கல்விமுறையின் பலம் என்றார்.

“உங்களில் பலர் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் கல்வியில் மட்டுமல்ல தனிநபர்களாகவும் சமூகமாகவும் வளர்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்,” என்று மாணவர்களிடம் திரு லீ கூறினார்.

உயர்நிலை ஒன்றாம் இரண்டாம் நிலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடத்தைக் கல்விக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரியும் துணை அமைச்சர் திருவாட்டி ஜெஸ்மின் லாவும் பார்வையிட்டனர்.

அதில் இதர சமூகங்களைச் சரிவர புரிந்துகொள்ள உதவும் மரியாதைக்குரிய உரையாடல்களிலிருந்து முக்கியமான அம்சங்களை எப்படி புரிந்துகொள்வது என்பதை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

வேற்றுமைகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் முக்கிய பாடத்தைக் கற்றுக்கொண்டதாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்