புனித வெள்ளியால் வரும் வார இறுதியில், உட்லண்ட்ஸ், துவாஸ் நில எல்லைகளில் பயணிகள் குடிநுழைவுச் சோதனைகளைக் கடக்கக் கூடுதல் நேரம் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 17லிருந்து 21ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இரு நில எல்லைகளிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) அறிக்கைமூலம் குறிப்பிட்டது. ஆண்டுதோறும் பொதுவாக புனித வெள்ளி நீண்ட வார இறுதியில்தான் இரு நில எல்லைகளிலும் ஆக அதிகப் போக்குவரத்து இருக்கும் என்றும் ஆணையம் சுட்டியது.
கடந்த மார்ச் மாதம் 28லிருந்து 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் நில எல்லைகளைக் கடந்தனர். அதிலும் 28ஆம் தேதி ஆக அதிகமாக 538,000க்கும் அதிகமானோர் நில எல்லைகளைக் கடந்தனர். குடிநுழைவுச் சோதனைகளைக் கடக்க பயணிகள் மூன்று மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் ஆணையம் தெரிவித்தது.
புனித வெள்ளி வார இறுதியில் நில எல்லைகள்வழி பயணம் செய்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க எல்லை தாண்டிய பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.