சிறந்த கொள்கைகள் தானாகவே அமைந்துவிடுவதில்லை: மூத்த அமைச்சர் லீ

சிறந்த கொள்கைகளுக்கு உயர்தர பொதுச் சேவை அவசியம்

சிறந்த கொள்கைகள் தானாகவே அமைந்துவிடுவதில்லை: மூத்த அமைச்சர் லீ

2 mins read
5be5605e-879c-4b5c-8bf8-600c77b1308a
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், நிர்வாகச் சேவை இரவு விருந்து 2026ல் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறந்த கொள்கைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்த சிங்கப்பூருக்கு உயர்தரமான பொதுச் சேவை தேவைப்படுகிறது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

சவால்களை நன்கறிந்த அமைச்சர்களும் திறம்பட்ட கொள்கை வகுக்கப்படுவதற்கான ஆற்றல், வழிகாட்டுதலை வழங்கக்கூடியவர்களும் சம முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

“சிறந்த கொள்கைகள் தானாகவே அமைந்துவிடுவதில்லை,” என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) அரசாங்க ஊழியர்களுக்கான பொதுச் சேவை விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு லீ, கூடுதல் பொறுப்புகளை ஏற்பவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஏறத்தாழ 300 அரசாங்க ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், பணி ஓய்வுபெறுவோரின் பங்களிப்புகளுக்காக அவர்களைத் திரு லீ பாராட்டினார்.

“சிறந்த, புதுமையான அரசாங்கக் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்த, சிங்கப்பூர் மக்கள் ஒரு முதல் தர பொதுச் சேவையை நம்பியுள்ளனர். எனவே, நாடுசார்ந்த தீர்மானங்களுக்கு பொதுச் சேவை ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது,” என்றார் அவர்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங், பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான சான் சுன் சிங், மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அமைச்சர்கள் தீர்மானிக்கும் எந்தக் கொள்கையையும் வெறுமனே செயல்படுத்துவது மட்டும் அரசாங்க ஊழியர்களின் பொறுப்பல்ல என்றார் திரு லீ.

“அரசாங்க ஊழியர்கள், வகுக்கப்பட்ட கொள்கைகள்மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்து அவற்றுக்குக் கட்டுப்படவும் வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் ‘எகனாமிக் ரிவியூ’ இதழில் பொதுக் கொள்கையில் நுண் பொருளியல் குறித்த ஒரு கட்டுரையை அண்மையில் திரு லீ வெளியிட்டார்.

பல சமூக, பொருளியல் நோக்கங்களை அடைய, சிங்கப்பூரின் கொள்கைகளில் பொருளியல் விதிகளும் சந்தை சக்திகளும் எவ்வாறு முறையாகவும் விரிவாகவும் பயன்படுத்தப்பட்டன என்பதை அக்கட்டுரை எடுத்துரைத்தது.

சிறந்த கொள்கைகளை வகுத்து, அவற்றைச் செயல்படுத்துவதே அரசாங்கத்தின் வேலை என்பதே தமது கட்டுரையின் அடிப்படைக் கருத்து என்றார் திரு லீ.

இருப்பினும், சிறந்த கொள்கைகளுக்கான ஆதரவை அரசாங்கம் பெற வேண்டும். அத்தகைய கொள்கைகளைச் செயல்படுத்தும் தலைவர்களை ஆதரிக்க மக்களும் தயாராக இருக்கவேண்டும் என்று திரு லீ கூறினார்.

“இல்லையெனில், மிகச் சிறந்த கொள்கை யோசனைகள்கூட வெறும் யோசனைகளாகவே இருந்துவிடும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்