வீவக வீடுகளின் புதிய வகைப்பாட்டு முறைக்கு நல்ல வரவேற்பு: வல்லுநர்கள்

2 mins read
65a94a33-c4a7-4e50-ae0e-2037ca75b79b
வீடுகள் அமைந்திருக்கும் இடம், வீட்டின் அளவு, மறுவிற்பனையில் உள்ள நீக்குப்போக்கு ஆகியவை வீடுகளின் தேவையில் முக்கியப் பங்கு வகிப்பதாக வல்லுநர்கள் கூறினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், முதன்மை (Prime), பிளஸ், அடிப்படை (Standard) ஆகிய வகைப்படுத்தும் நடைமுறையை அறிமுகம் செய்ததிலிருந்து சிறப்பு வட்டாரங்களில் உள்ள புதிய வீடுகளுக்கான தேவை தணிந்துள்ளது.

கழக வீடுகளின் புதிய வகைப்பாட்டு முறை, 2024ஆம் ஆண்டு அக்டோபரில் விற்பனைக்கு வந்த தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளுடன் (பிடிஓ) நடப்புக்கு வந்தது.

முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையாத பேட்டைகளில் உள்ள வீடுகளை உள்ளடக்கிய பழைய வகைப்பாட்டு முறைக்குப் பதிலாகப் புதிய முறை பின்பற்றப்பட்டது.

அடிப்படை வீடுகளுடன் ஒப்புநோக்க, முதன்மை, பிளஸ் வகை வீடுகள் ரயில் நிலையங்கள், நகர மன்றங்கள் போன்ற வசதிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அத்தகைய வீடுகளுக்கான விதிமுறைகள் சற்றுக் கடுமையானவை.

முதன்மை அல்லது பிளஸ் வீடுகளை வாங்குவோர் ஐந்தாண்டுக்குப் பதிலாகக் குறைந்தபட்சம் அவற்றில் 10 ஆண்டுகள் தங்கியிருந்த பிறகே அவற்றை விற்க முடியும். மேலும், அத்தகைய வீடுகளுக்கு வழங்கப்படும் மானியங்களிலிருந்து 6லிருந்து 14 விழுக்காடு வரை வீவக திரும்பப் பெற்றுக்கொள்ளும்.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் முதன்மை, பிளஸ் வீடுகளுக்கான அளவுக்கு அதிகமான தேவையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன,

2024 அக்டோபரிலிருந்து கழகம் 28,296 பிடிஓ வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. அவற்றுள் பாதிக்கும் மேற்பட்டவை அடிப்படை வீடுகள்.

எஞ்சிய வீடுகளில் ஐந்தில் மூன்று வீடுகள் முதன்மை வீடுகள், மற்றவை பிளஸ் வீடுகள். பெரும்பாலான புகழ்பெற்ற பேட்டைகளில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து முதன்மை வீடுகளுக்கான தேவை கடந்த ஆண்டு தணிந்ததாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஒப்புநோக்க, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட முதன்மை வீடுகளுக்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளன என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

மாறாக, பிளஸ் வீடுகளுக்கான தேவை நிலையாக இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

வீடுகளை வாங்குவோர், கடுமையான மறுவிற்பனைக் கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வீடுகளைத் தேர்வு செய்வதாக வல்லுநர்கள் கூறினர்.

ஒட்டுமொத்தத்தில், புதிய வகைப்படுத்தும் முறைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

வீடுகள் அமைந்திருக்கும் இடம், வீட்டின் அளவு, மறுவிற்பனையில் உள்ள நீக்குப்போக்கு ஆகியவை வீடுகளின் தேவையில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்