தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா - சீனா நல்லுறவால் உலகிற்கே நன்மை: அதிபர் தர்மன்

2 mins read
6b504d1a-966d-42d5-a952-f7227a769102
வாஷிங்டனிலுள்ள அனைத்துலகப் பண நிதியத் தலைமையகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி விரிவுரையாற்றிய அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: இஸ்தானா

அமெரிக்கா - சீனா இடையிலான போட்டியை அகற்றப்பட வேண்டிய மிரட்டலாகப் பார்க்காமல், அதனை நன்கு கையாள வேண்டிய ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அது நன்கு கையாளப்பட்டால், இருதரப்பு ஒத்துழைப்புமூலம் அவ்விரு வல்லரசுகளும் செழிப்படையலாம் என்றும் அது உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்றும் அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அனைத்துலகப் பண நிதியத் தலைமையகத்தில் புதன்கிழமை (அக்டோபர் 15) ஆற்றிய விரிவுரையின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகின் இரு பெரும்பொருளியல்களான அமெரிக்காவும் சீனாவும் தனித்தனியாகப் பிரிந்து செயல்படுவதால் எவரும் வெற்றிபெற முடியாது என்றும் மாறாக அபாயங்களே அதிகரிக்கும் என்றும் திரு தர்மன் எச்சரித்துள்ளார்.

“அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான உறவுமுறையை வேறுபட்ட முறையில் கையாள வேண்டியிருக்கும். பலதுருவ உலகமானது எதிரெதிராகப் பிரிந்து நிற்கும், அபாயத்தைத் தவிர்ப்பதற்கு அது மிக முக்கியம்,” என்றார் அதிபர்.

கணினிச் சில்லு தயாரிப்பு போன்ற முக்கியத் தொழில்நுட்பங்களில் சீனா தன்னை எட்டிப் பிடிக்க முயல்வதை அமெரிக்காவால் சற்றுத் தாமதப்படுத்த முடியலாமே தவிர, சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பது அமெரிக்காவால் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனா தனது வளர்ச்சியின்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய மற்ற நாடுகளுடன் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதைத் தொடருமா அல்லது தனது வளர்ச்சிக்கு தற்சார்பு உத்தியைக் கையாளுமா என்பதுதான் கேள்வி.

அதே நேரத்தில், முக்கியத் தொழில்நுட்பங்கள் அல்லது பொருள்களை ஆயுதமயமாக்குவதைத் தவிர்க்க வேண்டுமெனில் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை இருதரப்பும் தீவிரமாக நிர்வகிக்க வேண்டும் என்றும் தனித்தனியாகச் செயல்படுவது இன்னும் அபாயகரமான உலகத்திற்கு இட்டுச் செல்லும் என்றும் அதிபர் தர்மன் எச்சரித்தார்.

“அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்படுவதன் தொடர்பில், சூழலியல் உலகிடமிருந்து மாற்றுக் கண்ணோட்டத்தை நாம் பெறலாம். இருதரப்பும் கடுமையாகப் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், இருநாடுகளுக்கும் உலகிற்கும் பெரும்பயனை அளிக்கக்கூடிய வழிகளில் அவை ஒத்துழைக்கலாம்,” என்றார் அவர்.

பெர் ஜேக்கப்சன் அறநிறுவனத்தின் ஆண்டு உரைத் தொடரின் ஒரு பகுதியாக அனைத்துலகப் பண நிதியத்தில் அதிபர் தர்மன் விரிவுரை நிகழ்த்தியிருப்பது இது இரண்டாவது முறை.

அக்டோபர் 13 முதல் 17 வரை ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள திரு தர்மன், வேறு பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்