வேர்க்கடலையில் செய்யப்படும் ‘குட்ஸ் வெஜ் பீனட் கேக்’ விற்பனையில் இருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பொட்டலத்தில் இடம்பெற்றுள்ள விவரத்தில் தெரிவிக்கப்படாத பால் சேர்க்கப்பட்டிருப்பதை சிங்கப்பூர் உணவு அமைப்பு கண்டறிந்ததையடுத்து, அது மீட்டுக்கொள்ளப்பட்டதாக அதனை இறக்குமதி செய்யும் ‘குட்ஸ் ஹுவாட் ஹீ மார்க்கெட்டிங்’ வியாழக்கிழமை (ஜனவரி 16) தெரிவித்தது.
மலேசியாவில் தயாரிக்கப்பட்டு, இறக்குமதியாகும் அந்தத் தின்பண்டம் 2025 டிசம்பர் 1 அன்று காலாவதியாகிறது.
பால் பெரும்பாலானோருக்கு பிரச்சினையை ஏற்படுத்தாது என்றாலும், பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
பால் ஒவ்வாமை உள்ளவர்கள், அதை உட்கொண்டதும் அறிகுறிகள் ஏற்படும். பொதுவாக மூச்சுத்திணறல், வாந்தி, விக்கல், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும் என்று மேயோ கிளினிக் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் உணவு விதிமுறைகளின்கீழ், உணவு ஒவ்வாமைப் பிரச்சினை உள்ளோரைப் பாதுகாக்கும் வகையில், உணவுப் பொட்டலத்தில் இடம்பெற்றுள்ள விவரங்களில் அதில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் பற்றி குறிப்பிடப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
பால் ஒவ்வாமை உள்ளவர்கள் அதனை உட்கொண்டிருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அமைப்பு ஆலோசனை வழங்கியது.