‘கூகல் டீப்மைண்ட்’ (Google DeepMind) சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வுக்கூடத்தைத் திறந்துள்ளது.
இது, கூகல் டீப்மைண்ட் தென்கிழக்காசியாவில் திறந்துள்ள முதல் கிளையாகும். வட்டார அளவில் அரசாங்கங்கள், வர்த்தகங்கள், சமூகத்தினர், கல்விக் கழகங்கள் ஆகிய தரப்பினருடன் ஒத்துழைப்பதில் கூகல் டீப்மைண்டின் சிங்கப்பூர்க் கிளை கவனம் செலுத்தும் என்று சிஎன்ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகள், மென்பொருள் பொறியாளர்கள், செயல்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் ஆகியோர் சிங்கப்பூர்க் கிளையில் பணியாற்றுவர் என்று கூகல் நிறுவனத்தின்கீழ் செயல்படும் கூகல் டீப்மைண்ட் புதன்கிழமை (நவம்பர் 19) தெரிவித்தது.
கூகல் டீப்மைண்டின் சிங்கப்பூர் கிளை செயல்படத் தொடங்கிவிட்டது. தற்போது ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நடவடிக்கை நடந்து வருவதாக அது கூறியது.
எத்தனை பேரை வேலைக்கு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, புதிய ஆய்வுக்கூடத்தை அமைக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது போன்ற விவரங்களை கூகல், ஊடகங்களின் கேள்விகளுக்கான பதில்களில் தெரிவிக்கவில்லை.
‘மேப்பல்டிரீ’ வர்த்தகப் பூங்காவில் உள்ள கூகலின் சிங்கப்பூர்க் கிளையில் அதன் டீப்மைண்ட் மூத்த செயல்பாட்டு அதிகாரி லிலா இப்ராகிம் புதிய கிளையைப் பற்றி அறிவித்தார். சிங்கப்பூரின் தொலைநோக்குப் பார்வை, அதைப் புதிய ஆய்வுக்கூடத்தை அமைப்பதற்கான உகந்த இடமாக விளங்கச் செய்கிறது என்று திருவாட்டி லிலா இப்ராகிம் குறிப்பிட்டார்.
டீப்மைண்ட் அதன் ஆய்வு சார்ந்த இலக்குகளைச் சீரமைத்துவருகிறது. இந்நிலையில், கல்வி, கற்றல், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றிலும் டீப்மைண்ட் ஈடுபட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
டீப்மைண்டின் சிங்கப்பூர்க் கிளை குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில் ஊடகங்கள், பங்காளி அமைப்புகள் ஆகியவை கலந்துகொண்டன. ஏஐ சிங்கப்பூர் அமைப்பு, பொருளியல் வளர்ச்சிக் கழகம் அகியவையும் அவற்றில் அடங்கும்.
டீப்மைண்ட் 2010ஆம் ஆண்டு பிரிட்டனில் நிறுவப்பட்டது. 2014ஆம் ஆண்டு கூகல் அதை வாங்கியது.
கூகல் டீப்மைண்டின் தலைமையகம் லண்டனில் அமைந்துள்ளது. இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் டீப்மைண்டின் கிளைகள் உள்ளன.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் டீப்மைண்ட் கிளை திறக்கப்பட்டுள்ளது.
வட்டார மொழிகள், வட்டாரத்துக்கு உரிய கலாசார அம்சங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு செயல்பட வகைசெய்யும் முயற்சிகளுக்கு மெருகூட்டுவதில் சிங்கப்பூர் கிளை கவனம் செலுத்தும்.

