சிங்கப்பூரில் கூகல் தளத்தைப் பயன்படுத்துபவர்களின் வயதை உறுதிப்படுத்தும் அணுகுமுறை திங்கட்கிழமை (பிப்ரவரி 2) அறிமுகப்படுத்தப்பட்டது.
இணையத்தைப் பயன்படுத்தும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெமினாய், கூகல் வரைபடங்கள், கூகல் பிளே, கூகல் தேடுபொறி, யூடியூப் ஆகியற்றுக்கு இது பொருந்தும்.
சென்ற இடங்கள், பயணப் பாதைகள், ஆகியவற்றை கூகல் வரைபடங்கள் மூலம் காட்டக்கூடிய அம்சங்கள் முடக்கப்படும். பெரியவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய செயலிகளைச் சிறுவர்கள் பயன்படுத்த முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
முக்கியமாக, சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற உள்ளடக்கங்களைக் கூகல் சேஃப்சர்ச் கருவி நீக்கும். யூடியூப் நல்வாழ்வுக் கருவிகள் செயல்படுத்தப்படும்.
குறிப்பிட்ட சில உள்ளடக்கங்களைத் தொடர்ந்து பார்க்கும்போது இடைவேளை எடுத்துக்கொள்ளவும் வரம்புகள் விதித்துக்கொள்ளவும் நினைவூட்டப்படுவதும் யூடியூப் நல்வாழ்வுக் கருவிகளில் அடங்கும்.
இயந்திரக் கற்றல் அணுகுமுறையைப் பயன்படுத்தி, கூகல் பயனாளர்களின் கணக்கு மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கொண்டு அவரது வயதை கூகல் மதிப்பிடும்.
தேடப்படும் உள்ளடக்கங்கள், காணொளி வகைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டால் தானியங்கி முறையில் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் அனுப்பிவைக்கப்படும்.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த நடவடிக்கைகள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகல் தெரிவித்தது.
18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று மதிப்பீடு செய்யப்படுபவர்களுக்கும் அவர்கள் கூகலுடன் தொடர்புடைய தளங்களைப் பயன்படுத்தும்போது அவர்களது இணைய அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
பெரியவர்களுக்கு தவறுதலாக இந்நிலை ஏற்பட்டால், தங்கள் அடையாள அட்டைப் படத்தைப் பதிவேற்றம் செய்து அல்லது ‘செல்ஃபி’ எடுத்து அவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தலாம் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூகல் தெரிவித்திருந்தது.
கூகலின் வயதை உறுதிப்படுத்தும் அணுகுமுறை “சிங்கப்பூரைத் தவிர, பிரேசிலுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் விரிவுபடுத்தப்படும். மேலும் உலகளாவிய அணுகுமுறை பின்பற்றப்படும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிப்ரவரி 2ஆம் தேதி கேட்ட கேள்விகளுக்குக் கூகல் மேற்கண்டவாறு பதிலளித்தது.

