தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முறையற்ற செயலிகளை இளையர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க கூகல் திட்டம்

2 mins read
dd87ab2f-865b-4c97-9e50-a63ea89b0df0
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, ஆப் ஸ்டோரைப் (App Store) பயன்படுத்துவோரின் வயதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கூகலின் அண்மை அறிவிப்பு வந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

கூகல் பிளே ஸ்டோர் (Google Play Store) சிங்கப்பூரில் 18 வயதுக்குட்பட்டோர் முறையற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்குத் தடை விதிக்கவிருக்கிறது.

பாலியல் உள்ளடக்கத்தை வழங்கும் அல்லது காதலர்கள் சந்திப்பதற்கு உதவும் செயலிகள் முதலியவை அவற்றுள் சில. அத்தகைய செயலிகளை அணுகுவோரின் வயது சரிபார்க்கப்படும். பின்னர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் எனத் தெரியவந்தால் அவற்றைப் பயன்படுத்தமுடியாது. அடுத்த ஆண்டு (2026) மார்ச் இறுதிக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று கூகல் கூறியுள்ளது.

யூடியூப் (YouTube) ஊடகத்தில் சில வகை உள்ளடக்கங்களை மீண்டும் மீண்டும் பார்க்கும் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்குச் சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ளும்படி நினைவூட்டப்படும் என்று கூகல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தெரிவித்தது. குறிப்பிட்ட உடலுறுதி நிலைகள் அல்லது உடல் எடைகளை மிகச் சரியானவை எனக் கூறும் அல்லது சமூக வெறுப்பைத் தூண்டும் படைப்புகளைத் திரும்ப திரும்பப் பார்ப்பதிலிருந்து அவர்கள் தடைசெய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, ஆப் ஸ்டோரைப் (App Store) பயன்படுத்துவோரின் வயதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூகலின் அண்மைக் கட்டுப்பாடுகள் வந்துள்ளன.

அரசாங்கம் வழங்கும் அடையாள ஆவணங்கள் அல்லது முகப் பகுப்பாய்வுகள் அல்லது இணையத் தரவுகளின் மூலம் வயது உறுதிப்படுத்தப்படும்.

“புதிய நடவடிக்கை பெற்றோருக்குக் கூடுதல் கட்டுப்பாட்டு அம்சங்களைக் கொடுக்கும். அத்துடன் ஒவ்வோர் இளையரும் வயதுக்குத் தகுந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் கூடுதல் பாதுகாப்பை எங்களின் கட்டமைப்புகள் இயல்பாகவே வழங்கவேண்டும் என்பதும் முக்கியம்,” என்று கூகல் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் பென் கிங் கூறினார்.

பாசிர் பாஞ்சாங் அலுவலகத்தில் நடைபெற்ற ‘பாதுகாப்பாக கூகலுடன்’ எனும் பொருள்படும் ‘சேஃபர் வித் கூகல்’ நிகழ்ச்சியில் திரு பென் பேசினார்.

இணையத்தில் தேடப்படும் சொற்றொடர்கள் அல்லது பார்க்கப்படும் உள்ளடக்கங்கள் முதலிய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தின் மூலம் கூகல் ஒருவரின் வயதைக் கணக்கிடுகிறது.

வயது தொடர்பான கட்டுப்பாடுகளை அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பியப் பொருளியல் வட்டாரத்தின் சில பகுதிகள் முதலியவற்றில் கூகல் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் அவை அறிமுகம் காணவிருக்கின்றன.

கூகல் நிகழ்ச்சியில் பேசிய தகவல் மின்னிலக்க மேம்பாட்டுத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், நிறுவனத்தின் புதிய முயற்சியைப் பாராட்டினார். இணைய நடவடிக்கைகளில் இளையர்களைப் பாதுகாக்கத் தகுந்த சூழலை உருவாக்குவதற்கு அது உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்