மத்திய கிழக்கு வட்டாரத்தில் தொடர்ந்து நிலவும் அசாதாரண சூழல்கள் உலகளாவிய அளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவருகிறது.
இந்தப் புவிசார் அரசியல் பதற்றங்களைக் கருத்தில்கொண்டு, அவற்றால் நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் பூசலால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் சார்ந்த நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவ ஏறத்தாழ $1 பில்லியன் வரையிலான கூடுதல் ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்று நிதித்துறை மூத்த துணை அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அறிவித்தார்.
அதன்படி, சிங்கப்பூர்க் குடும்பங்கள் முதல் உள்ளூர் வணிகங்கள்வரை உதவிக்கரம் நீளும்.
2026 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுடன் கூடுதலாக இந்த புதிய உதவித் திட்டங்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட திரு சியாவ், அவை தொடர்பான விவரங்களையும் வெளியிட்டார்.
உள்ளூர் போக்குவரத்துத் துறைக்கு உதவி
உள்ளூர் போக்குவரத்துத் துறைக்கு ஆதரவு வழங்கப்படுமென தற்காலிகப் போக்குவரத்து அமைச்சருமான திரு சியாவ் தெரிவித்தார்.
‘‘எரிபொருள் விலைகளின் கடுமையான உயர்வு, இணையவழி ஊழியர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்களின் வருமானத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘’இந்நிலையில், எரிபொருள் பற்றுச்சீட்டு, கட்டண மாற்றங்கள் குறித்து தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) இணையவழி, டாக்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது,’’ என்றார் திரு சியாவ். அவை பாதிப்பைக் குறைக்க உதவியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
டாக்சி ஓட்டுநர்களுக்கு $200 ரொக்கம்
இதற்கிடையே, இச்சூழலில் கூடுதல் ஆதரவுக்கரம் நீட்டும் இலக்குடன், அரசாங்கம் இம்மாத இறுதியிலிருந்து இணையவழி ஊழியர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு $200 ரொக்கம் வழங்கப்படும் என்று திரு சியாவ் அறிவித்தார்.
பள்ளி மாணவர்கள், முதியவர்கள், உடற்குறையுள்ளோருக்கான சேவைகள் போன்ற சில அத்தியாவசிய பேருந்துச் சேவைகள் தொடர்பில், அதிகரித்துள்ள செலவினங்களின் ஒரு பகுதியை ஏற்க அரசாங்கம் தற்காலிக உதவி வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
‘‘இதன்மூலம் அந்தச் சேவைகள் இடையூறு இன்றித் தொடர்ந்து செயல்பட முடியும். சம்பந்தப்பட்ட அமைப்புகள் இது தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிடும்,’’ என்றும் அவர் கூறினார்.

