பிரதமர் லாரன்ஸ் வோங் 2026 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்ட உரையில், சிங்கப்பூர் நிறுவனங்கள் சந்தையில் தாக்குப்பிடிக்கவும் வளர்ச்சி பெறவும் கைகொடுக்கும் பல்வேறு பொருளியல் உத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.
அவற்றில் பெருநிறுவன வருமான வரித் தள்ளுபடியும் ஒன்று. இந்நிலையில், ஈரான் போர்ச் சூழலால் தொழில்துறையில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க இந்த வருமான வரித் தள்ளுபடி 40 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று நிதித்துறை மூத்த துணை அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
வளைகுடாப் பகுதியில் நிலவும் போர் சார்ந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க பல்வேறு ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் செலவினங்கள் சார்ந்த சுமையால் வருந்தும் நிறுவனங்களுக்கும் குறிப்பிடத்தகுந்த உதவிகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், எரிசக்தி மற்றும் போக்குவரத்துச் செலவினங்களை நிறுவனங்கள் சமாளிக்க, குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான பெருநிறுவன வரித்தள்ளுபடி 50 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) திரு சியாவ் அறிவித்தார்.
மத்திய கிழக்கு நிலைமையால் நிகழ்ந்துவரும் திடீர் விலை உயர்வால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன என்றும், அவற்றின் பணப்புழக்கத்தை நிர்வகிக்க உதவும் வகையில் அரசாங்கம் ஆதரவு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் என்றும் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சருமான திரு சியாவ் கூறினார்.
குறைந்தது ஓர் உள்ளூர் ஊழியரையேனும் கொண்டுள்ள நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச வரிச் சலுகை $1,500லிருந்து $2,000ஆக உயர்கிறது.
அதே வேளையில், ஒவ்வொரு நிறுவனத்திற்குமான மொத்த வரித் தள்ளுபடி உச்ச வரம்பு $30,000லிருந்து $40,000ஆக உயர்த்தப்படும் என்றும் திரு சியாவ் தெரிவித்தார்.
இந்த மேம்படுத்தப்பட்ட சலுகைகளை அரசாங்கம் இம்மாத இறுதியிலிருந்தே வழங்கத் தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
தொழில்துறைக்கான உதவிகளை அறிவித்த திரு சியாவ், அதிக எரிசக்தி விலைகளுக்கு எதிராக நீண்டகாலத் மீள்திறனை வளர்த்துக்கொள்ளுமாறு நிறுவனங்களை ஊக்குவித்தார்.

