தமிழ்ச் சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து ஒலிப்பதற்கு, தமிழ் முரசுக்கு ஆதரவு நல்குவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.
‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெறும் தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் அவர் உரையாற்றினார்.
“அதனால்தான் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டுக்கு நிதி வழங்கியபோது தாய்மொழி ஊடகங்களுக்கு ஆதரவு அளித்து, வலுப்படுத்தவேண்டும் என்று நிபந்தனை விதித்தோம்,” என்று அவர் கூறினார்.
சரியான திசையில் தமிழ் முரசு முயற்சி மேற்கொள்வதைக் கண்டு அகமகிழ்வதாகத் திருமதி டியோ பாராட்டினார்.
90 ஆண்டுகளாகத் தொடரும் வலுவான பங்களிப்புக்காகத் தமிழ் முரசுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்த அமைச்சர், சொற்களில் தெளிவு, நீதி, ஆர்வம் ஆகியவற்றுடன் பல தலைமுறைகளைச் சேர்ந்த சிங்கப்பூர் இந்தியர்களுக்குத் தகவல்களைத் தந்து, அவர்களை உயர்த்தி, ஒன்றிணைக்க நாளிதழுக்கு வாழ்த்து கூறினார்.