ஊடகங்கள் இதழியல் தரநிலைகளைக் கட்டிக்காக்க வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க்கிறது: ஜோசஃபின் டியோ

2 mins read
292095cc-5824-4902-a902-be1357d3bbcd
பாசிர் ரிஸ் - சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீ, எஸ்பிஎச் மீடியாவின் ஸ்டாம்ப் இணையத்தளம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தகவல் வெளியீடு தொடர்பான ஊடகங்களின் முடிவுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்றாலும் அவை பொறுப்புணர்வுமிக்க இதழியல் (journalism) தரநிலைகளைக் கட்டிக்காக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

பாசிர் ரிஸ் - சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீ, எஸ்பிஎச் மீடியாவின் ஸ்டாம்ப் இணையத்தளம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குத் திங்கட்கிழமை (ஜனவரி 12) எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாம்ப் தளத்தில் வெளியாகும் தகவல்கள் அடிக்கடி சிறுபத்திரிகை (Tabloid) பாணியில் அமைந்திருக்கும் நிலையில், அந்தத் தளம் பொதுமக்களின் நம்பிக்கை மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம், அரசாங்க ஆதரவு பெறும் தளங்களிடம் எதிர்பார்க்கப்படும் தரநிலைகள் ஆகியவை குறித்து அரசாங்கம் கவலை கொள்கிறதா என்று திருவாட்டி லீ கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் டியோ, அனைத்து ஊடகங்களும் அவற்றின் செய்திகள் துல்லியமாகவும், நியாயமானவையாகவும் சட்டத்துக்கு உட்பட்டும் இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் பொறுப்புமிக்க இதழியல் தரநிலைகளைக் கட்டிக்காக்க வேண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

திருவாட்டி லீ இதன் தொடர்பில் கேள்வி எழுப்பியதற்கான காரணம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அவரிடம் கேட்டது.

அரசாங்க ஆதரவு பெறும் தளம் ஒன்று, ஒருவரின் பொறுப்பற்ற கருத்தைப் பெரிதுபடுத்தி, ஓய்வுபெறவிருக்கும் உணவங்காடிக் கடைக்காரரைக் கண்ணீர் சிந்த வைத்தது தமக்குக் கவலையளிப்பதாகத் திருவாட்டி லீ பதிலளித்தார்.

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி ஸ்டாம்ப் தளத்தில் வெளியான செய்தியை அவர் சுட்டினார். தோ பாயோ நார்த்தில் விரைவில் மூடப்படவிருக்கும் ஓர் உணவுக்கடையில் விற்கப்படும் உணவின் விலை, தரம் ஆகியவை குறித்து அச்செய்தி குறைகூறியிருந்தது.

பலரின் கவனத்தை ஈர்த்த அச்செய்தி, பின்னர் இணையத்தில் பேசுபொருளானது. பலரும் அந்த உணவுக் கடைக்காரர்கள் மீதான இரக்கத்தைப் பதிவுசெய்திருந்தனர்.

அமைச்சரின் கருத்தைத் தாம் ஏற்பதாகக் கூறிய திருவாட்டி லீ, துல்லியம், நேர்மை, கண்ணியம் போன்றவை பொறுப்புமிக்க இதழியலின் அடிப்படை அம்சங்கள் என்றார்.

குறிப்புச் சொற்கள்