‘லாங் ஐலண்ட்’ தீவுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்க அரசாங்கம் திட்டமிடுகிறது

‘லாங் ஐலண்ட்’ தீவுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்க அரசாங்கம் திட்டமிடுகிறது

2 mins read
நகர மறுசீரமைப்பு ஆணையம் தகவல்
a9358932-ddaa-411d-8adc-273cca93c4fa
‘லாங் தீவு’ என்று அழைக்கப்படும் மீட்கப்பட்ட நிலப் பரப்பு, தானா மேரா முதல் மரினா ஈஸ்ட் வரை அமைந்திருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘லாங் ஐலண்ட்’ தீவை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்க அரசாங்கம் திட்டமிடுகிறது. அந்த வட்டாரத்திற்கு அடிக்கடி செல்வோருக்கு இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்தப் பணிகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும்.

நகர மறுசீரமைப்பு ஆணையம் திங்கட்கிழமை (மார்ச் 30) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கடற்படுகையில் உள்ள இடையூறுகளை அகற்றுதல், கடற்பரப்பிற்குள் நில மீட்புக்கான பொருள்களை எடுத்துச்செல்லல் போன்றவையும் ஆயத்தப் பணிகளில் அடங்கும். நில மீட்புத் திட்டம் உரிய நேரத்தில் நிறைவடைவதை உறுதிசெய்வதற்கு இந்தப் பணிகள் முக்கியம்.

மீட்கப்படும் நிலப் பரப்பு, தானா மேரா முதல் மரினா ஈஸ்ட் வரை அமைந்திருக்கும்.

கலைஞரின் சித்திரிப்பில் ‘லாங் ஐலண்ட்’ தீவு.
கலைஞரின் சித்திரிப்பில் ‘லாங் ஐலண்ட்’ தீவு. - படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்

மரினா பே வட்டாரத்தைப்போல் ஏறத்தாழ இருமடங்காக இருக்கக்கூடிய அதில், கிட்டத்தட்ட 800 ஹெக்டர் நிலப்பரப்பு மீட்கப்படும். புதிய வீடுகள், நீர்த்தேக்கம், ஏறக்குறைய 20 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய நீர்முகப்புப் பூங்காக்கள் போன்றவை அங்கு அமைக்கப்படும்.

இந்தத் திட்டம், கடல்மட்டத்திலிருந்து 5 மீட்டருக்குக் குறைவான உயரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் பூங்காப் பகுதியைப் பாதுகாக்கும் விதத்தில் அமைந்திருக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் சிங்கப்பூரில் கடல்மட்டம் 5 மீட்டர் உயரும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா போன்ற கடலோரப் பகுதிகள் சில அண்மைய ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை ஆணையம் சுட்டியது.

2024 ஜனவரியிலும் இவ்வாண்டு ஜனவரியிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தன. கடல்மட்ட உயர்வு, கடுமையான மழை போன்றவற்றால் ஏற்பட்ட இச்சம்பவங்கள் கட்டங்கட்டமாகக் கரையோரப் பாதுகாப்புப் பணிகளைத் தொடங்க வேண்டியதன் தேவையை வலியுறுத்துவதாக ஆணையம் கூறியது.

ஆயத்தப் பணிகள் தொடர்பான மேல்விவரங்கள் வரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என்று அது சொன்னது. இருப்பினும் அந்தப் பணிகள் தொடங்கவிருக்கும் தேதியை அது வெளியிடவில்லை.

தொழில்நுட்ப ஆய்வுகள், தணிப்பு நடவடிக்கைகள், பொதுமக்களிடம் திரட்டப்படும் கருத்துகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, பின்னரே நிலமீட்புக்கான திட்டங்களும் வடிவமைப்பும் உறுதிசெய்யப்படும் என்று கூறப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த கவலைகள்

‘லாங் ஐலண்ட்’ தீவு ஆமைகள் முட்டையிடக்கூடிய கடற்கரைகளுக்கு வெகு அருகில் அமையும் என்பதால் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோருகின்றனர்.

மேலும், பவளப்பாறைகளும் கடற்புல் வகைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உரிய பராமரிப்பு இல்லாவிட்டால், ‘சவுதர்ன் ஐலண்ட்ஸ்’ வட்டார பல்லுயிர்ச்சூழல் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்