உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு உதவ அரசாங்கம் தயார்: கிரேஸ் ஃபூ

உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு உதவ அரசாங்கம் தயார்: கிரேஸ் ஃபூ

2 mins read
00165e8d-e535-4e42-afeb-340534a0127e
செம்பவாங் குழுத்தொகுதியில் உள்ள கேன்பரா தொகுதிக்கு அமைச்சர்நிலை உலா மேற்கொண்டார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

விலைவாசி அதிகரிப்பு, உணவு விலையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அதிகாரிகள் கூர்ந்து கவனித்துவருகின்றனர் என்றும் குறிப்பாக உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு இது பொருந்தும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.

தமது அமைச்சும் அதன்கீழ் வரும் தேசிய சுற்றுப்புற வாரியமும் உணவங்காடிக் கடைக்காரர்கள், உணவு விநியோகிப்பாளர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் சொன்னார். உணவின் மொத்த விற்பனை விலை அதிகம் மாறாமல் சீராக இருந்தாலும் தளவாட விலை அதிகரிப்பு உணவு விலையைப் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டிக்காக்க உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பதாகவும் திருவாட்டி ஃபூ சொன்னார்.

“அவர்களின் செலவில் உணவு விலை பெரிய அங்கம் வகிப்பதை நாங்கள அறிவோம். தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருக்கிறோம்,” என்றார் அவர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரியில் போர் வெடித்ததிலிருந்து எண்ணெய், எரிவாயு விலையில் அதிக மாற்றம் ஏற்படக்கூடிய சூழல் நிலவிவருகிறது. அப்படியிருக்கையில் இந்நிலை தொடர்கிறது.

செம்பவாங் குழுத்தொகுதியில் உள்ள கேன்பரா தொகுதிக்கு சனிக்கிழமை (ஜூன் 6) அமைச்சர்நிலை சமூக உலா மேற்கொண்டபோது திருவாட்டி ஃபூ பேசினார். அரசாங்க ஆதரவையும் தாண்டி சமூக அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் விலைவாசி அதிகரிப்பைக் கையாள உதவலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விலைவாசி அதிகரிப்பால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் கையாள கேன்பராவாசிகளுக்கு உதவும் நோக்கில் இரண்டு திட்டங்களும் நிகழ்வின்போது தொடங்கப்பட்டன.

அவற்றில் ஒன்று, அடித்தள அமைப்புகளுக்கும் தொண்டூழிய அமைப்பான ஹார்ட்வார்மர்சுடனுமான (Heartwarners) பங்காளித்துவமாகும். ‘பிராஜெக்ட் சேவ்’ என்றழைக்கப்படும் இம்முயற்சியின்கீழ், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கேன்பரா சமூக மன்றத்தில் தற்காலிகக் கடைகள் திறக்கப்படும். அதில் வீட்டுக்குத் தேவையான 30லிருந்து 50 பொருள்கள் குறைந்த விலையில் விற்கப்படும் என்றார் செம்பவாங் குழுத்தொகுதியில் கேன்பரா நாடாளுமன்ற உறுப்பினர் கேப்ரியல் லாம்.

மற்றொரு திட்டம், அவ்வட்டாரத்தில் உள்ள இரு காப்பிக் கடைகளின் கூட்டு முயற்சியான ‘புரூ ஸ்பெ‌ஷல்ஸ்’. இதன்கீழ் முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினர் உள்ளிட்ட மூத்தோர் காப்பி, தேநீர் போன்ற பானங்களை 50 காசுக்கு வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்