சரியான சூழல்கள் அமைந்தால் தேவைகேற்பக் கட்டப்படும் வீடுகளை (பிடிஓ) வாங்குவோருக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கூறியுள்ளார்.
பிடிஓ வீடுகளை வாங்க விரும்பும் ஒற்றையர்களின் வயது வரம்பு தற்போது 35. மிகப் பெரிய அளவில் வீடுகள் விற்பனைக்கு வந்தால் அந்த வயது வரம்பும் குறைக்கப்படலாம் என்றார் அவர்.
“அதிகமான வீடுகளைத் துரிதமாகவும் சிறப்பாகவும் கட்டும்போது கூடுதலான சிங்கப்பூரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்,” என்று சொன்ன குமாரி சுன், அரசாங்கம் வருமான உச்சவரம்பை மறுஆய்வு செய்வதாகக் குறிப்பிட்டார்.
பொருளியல் போக்குகளுக்கு ஏற்ப இருக்கவும் கழக வீடுகளை வாங்க பெரும்பாலான சிங்கப்பூரர்கள் தகுதிபெறுவதை உறுதிசெய்யவும் வருமான உச்சவரம்பு மறுஆய்வு செய்யப்படுவதாக அவர் விளக்கம் அளித்தார்.
புதிய பேட்டைகளை இன்னும் சிறப்பாக உருவாக்கவும் பழைய பேட்டைகளைப் புதுப்பிக்கவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை திருவாட்டி சுன் தமது உரையில் சுட்டினார்.
கடைசியாக 2019ஆம் ஆண்டு பிடிஓ வீடுகளுக்கான வருமான உச்சவரம்பு மறுஆய்வு செய்யப்பட்டது. தம்பதிகளுக்கும் குடும்பங்களுக்குமான உச்சவரம்பு $14,000 என அப்போது நிர்ணயிக்கப்பட்டது.
வேலையில் சிறப்பாகச் செயல்பட்டு கூடுதலாக சம்பாதிக்கும் இளம் சிங்கப்பூரர்கள் இருக்கின்றனர் என்பதைச் சுட்டிய குமாரி சுன், கழக வீடுகளுக்கான வருமான உச்சவரம்பைவிட அதிகமாகச் சம்பாதிப்பதால் பிடிஓ வீடுகளுக்குத் தகுதிபெறாமல் போகலாம் என்ற அச்சம் அத்தகையோரிடம் இருக்கலாம் என்றார்.
“வருமானங்கள் கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளதை உணர்கிறோம்,” என்ற அவர், அரசாங்கம் அதை முன்னிட்டு வருமான உச்சவரம்பை மறுஆய்வு செய்யும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
35 வயதை எட்டிய பிறகே வீடுகளை வாங்க விண்ணப்பம் செய்யும் நடைமுறைக்கு இடையே வீடுகளை வாங்க விரும்பும் ஒற்றையரின் விருப்பதையும் குமாரி சுன் மேற்கோள் காட்டினார்.
அண்மை ஆண்டுகளில் ஒற்றையரும் கழக வீடுகளை வாங்குவதற்கான வழிகளை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார். அவற்றுள் ஒன்று தீவெங்கும் உள்ள ஈரறை வீடுகளை அவர்கள் வாங்க வகைசெய்தது என்றார் திருவாட்டி சுன்.