சமத்துவமின்மை போன்ற சமுதாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சமூகத்துடனும், பெருநிறுவனப் பங்காளிகளுடனும் இணைந்து அரசாங்கம் அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்கிறது.
அத்துடன் கல்வித்துறையும் உருமாற்றம் காணவிருக்கிறது என்று கல்வி அமைச்சரும் சமூகச் சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமாகிய டெஸ்மன்ட் லீ கூறியுள்ளார்.
மதிப்பெண்களில் மட்டும் கவனம் செலுத்தும் குறுகிய முறைகளிலிருந்து கல்வித் திட்டம் விலகவிருக்கிறது. மாணவர்கள் தகவமைத்துக்கொள்வதிலும் நுண்சிந்தனைத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் தேவையானவற்றை வழங்க அது மாற்றியமைக்கப்படும்.
மாணவர்களின் பின்புலங்களைத் தவிர்த்து, தேர்வுகளினால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைத்து, சமமான வாய்ப்புகளை அனைவருக்கும் உறுதிசெய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
ஆகவே, சிங்கப்பூரை எதிர்காலத்துக்குத் தயார்ப்படுத்த, இக்கட்டான சமூகப் பிரச்சினைகளைக் கையாள கல்வித் திட்டத்தை அரசாங்கம் மாற்றியமைக்கின்றது என்றார் அமைச்சர் லீ.
வெகு விரைவாக மாற்றம் காணும் உலகில், இளம் சிங்கப்பூரர்களுக்கு அடிப்படை அறிவை மட்டும் வழங்குவது போதாது. இன்று அவர்களுக்கு அளிக்கப்படும் அறிவு, எதிர்காலத்தில் பயனற்றதாகலாம் என்றார் அவர். வியாழக்கிழமை (செப்டம்பர் 25) நாடாளுமன்றத்தில் அதிபர் உரை மீதான விவாதத்தின்போது அவர் அவ்வாறு கூறினார்.
திரு லீ, நிலையற்ற சுற்றுச்சூழலை கடந்துசென்றிட சிங்கப்பூர் இளையர்கள் சீரிய சிந்தனை ஆற்றலைப் பெற்று, தொடர்கல்வி கற்று, நெகிழ்வுத் தன்மையுடனும் மீள்திறனுடனும் விளங்குவது மிக முக்கியம் என்றார்.
குழந்தைகள் எங்கிருந்து தொடங்கினாலும் அவர்கள் சிறந்து மலர சிங்கப்பூரின் கல்வித் திட்டம் பாதைகள் அமைத்துத் தரவேண்டும். எதிர்கால எண்ணங்களை அடைவதில் அவர்களுக்கு ஆதரவு வழங்கி, வலுவான விழுமியங்களை ஏற்படுத்தி, சமுதாயத்துக்கு அவர்கள் சேவையாற்ற உதவும் விதமாகக் கல்வித் திட்டம் விளங்கவேண்டும் என்றார் அமைச்சர் லீ.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “கலைகள், தொழில்நுட்பம், விளையாட்டு என எந்தத் துறையாக இருந்தாலும் ஒவ்வொரு தனிப்பட்டவரின் திறனையும் ஊழியரின் பங்கையும் மதித்துக் கொண்டாட விழைகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

